Friday, 22 September 2017

முதல் முதலாகப் பார்த்தபோது

     என் வாழ்க்கையில் நான் முதல் முதலாகப் பார்த்து வியந்தவை என ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

 எனக்கான பெண் பார்க்கும் படலத்தில் முதன் முதலாகப் பார்த்த  பெண்- அவள் பெயர் கூட இன்னும் நினைவில் இருக்கிறது - மாலதி.

         முதன் முதல் தொலைக்காட்சி பார்த்தது சென்னையில் 1976 ஆகஸ்ட் பதினைந்தாம் நாள்-  பொதிகைத் தொலைக்காட்சி தொடங்கிய நாள் அதுதான். அப்போது சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர்க் கல்லூரியில் பி.எட் படித்துக் கொண்டிருந்தேன்.

    முதல் முதலில் கப்பலைப் பார்த்தது  1984 ஆம் ஆண்டு- கொச்சின் துறைமுகத்திலிருந்து திப்புசுல்தான் என்னும் பெயர் கொண்ட கப்பலில் பயணித்தேன் இலட்சத் தீவை நோக்கி.

   பிரம்ம குமாரிகள் ஏற்பாட்டில் 2007 ஆம் ஆண்டு  மவுண்ட் அபு என்னும் இடத்தில் நடந்த மாநாட்டுக்காக சென்னையிலிருந்து அகமதபாத் சென்றபோது முதல் முதலாக விமானத்தைப் பார்த்தேன்; அதில் பயணித்தேன்.

  முதன் முதலில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களைப் பார்த்ததும் கைகுலுக்கியதும் 2003 ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று புதுதில்லியில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றபோது.

     முதல் முதலில் நான் பார்த்த வெளிநாடு அமெரிக்கா.

  இந்த வரிசையில்  நேற்று இன்னொன்றும் சேர்ந்து கொண்டது.Driverless car in front of Parliament Hill
(photo courtesy: Google)

Minister embarks the new ere  autonomous car
(photo courtesy: Google)

(photo courtesy; Google)
  என் மகள் வாங்கித் தந்த  மாதாந்திர பேருந்து பயண அட்டை கையில் இருப்பதால் ஊர் சுற்றுவதே எனது வேலையாக உள்ளது. நேற்று ஒட்டாவா நகரில்  பாராளுமன்றக் கட்டடம் அமைந்துள்ள வெலிங்க்டன் சாலையில் திரிந்துவிட்டு நகரப் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தேன். அதுவரையில் நான் பார்த்திராத வடிவில் ஒரு சிவப்பு வண்ண வாகனம்  வந்து சற்றுத் தள்ளி நின்றது. ஆர்வம் மிகுதியில் அதை ஓட்டுவது ஆணா பெண்ணா எனப் பார்க்க எண்ணினேன். அதற்குள் அதன் கதவு தானே திறந்தது. நான்கு பேர்கள் ஏறி அமர்ந்ததும் கதவு தானே மூடியது. ஓடிப்போய் பார்த்தேன். ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லை. ஆனால் அந்த வாகனம் புறப்பட்டுச் சென்றது! வியப்புடனும் குழப்பத்துடனும் இல்லம் திரும்பினேன். காட்சிப் பிழை நேர்ந்திருக்கலாம் என எண்ணி என் மனைவி மகளிடம் கூட அதுபற்றிப் பேசவில்லை.

 இன்று காலையில் மெட்ரோ போஸ்ட் நாளேட்டைப் பார்த்தபோதுதான் தெரிந்தது அது நான் முதல் முதலில் பார்த்த ஓட்டுநர் இல்லாத தானியங்கிப் பயணியர் வாகனம் என்பது.

     அந்த வாகனத்தில் பயணித்தது கனடா நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் மார்க் கரினியூ உள்ளிட்ட ஆய்வுக் குழு. கனடா நாட்டில் நிகழ்ந்த தானியங்கி காரின் முதல் சோதனை ஓட்டம் அது. தானியங்கி கார்கள் தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் குழுவும் அதுதானாம். தெளிவான காப்பீடு உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு, குடிமக்களின் கருத்தையும் இணைத்துப் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்படுமாம். ஒப்புதல் கிடைத்ததும் தானியங்கி வாகனங்கள் ஓடத்தொடங்குமாம். இதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ள இருக்கும் காலம் ஒரு வருடம் மட்டுமே.

   அடுத்த ஆண்டு நான் மீண்டும் கனடா வரும்போது தானியங்கிக் காரில் பயணிப்பது உறுதி.

    ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வீடு வீடாகச் சென்று பீசா வழங்கும் வாகனமாக இந்தத் தானியங்கி வாகனம் அறிமுகமானது. விபத்துகள் ஏதுமின்றி இயங்கியதால் இப்போது பல நாடுகளில் மெல்ல மெல்ல புழக்கத்திற்கு வருகின்றன.

  முன்னால் பின்னால் பக்கத்தில் வரும் வாகனங்களை உணர்ந்து வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் செல்கின்றன. முன்னால் தடை ஏற்படும்போதும் திருப்பங்களில் திரும்பும் போதும் அதற்கு ஏற்ப பிரேக் இயங்குகிறது. சாலையைக் கடக்கும் மனிதர்களைப் பார்த்ததும் நின்று வழிவிடுகிறது. சிக்னலில் சிவப்பு விளக்கைக் கண்டால் நிற்கிறது; பச்சை விளக்கைக் கண்டால் புறப்படுகிறது. ஜிபிஎஸ் கருவி வழிகாட்ட உரிய இடத்தைச் சென்று அடைகிறது. காரின் இயக்கத்தை நெறிப்படுத்த ரேடார் மற்றும் லிடார் என்னும் உணரிகள்(sensors) பொருத்தப்பட்டுள்ளன.(RADAR- Radio  Detection And Ranging; LIDAR- Laser Illuminating Detection And Ranging)

   வாகனத்தின் அடிப்பகுத்தியிலும் பக்கவாட்டிலும் பல சக்திவாய்ந்த வீடியோ கேமராக்கள் உள்ளன. அவை காரினுள் இருக்கும் செயற்கை நுண்ணறிவு(Artificial intelligence) கணிப்பொறிக்குத் தகவல்களை அளிக்கின்றன.

    இன்றைக்கு நிகழும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளே முக்கியக் காரணம் என்றும், தானியங்கி வாகனங்கள் புழக்கத்திற்கு வந்தால் மனித உயிர்கள் பறிபோகா என்றும் ஓர் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

    இந்தக் கார்கள் பரவலாக நடைமுறைக்கு வந்தால் பல்லாயிரக்கணக்கான ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் வினாக்குறி ஆகிவிடுமே என்னும் எதிர்ப்புக் குரலும் ஒருபுறம் ஒலிக்கத்தான் செய்கிறது. கணிப்பொறிகள் அறிமுகமானபோது ஒரு கணினி ஒன்பது பேர்களுடைய வேலைக்கு வேட்டு வைத்துவிடும் என்னும் எதிர்ப்புக்குரல் எழுந்தது; காலப்போக்கில் கணினி  இல்லாமல் வாழமுடியாது என எதிர்த்தவர்களே ஒத்துக்கொண்டார்கள்.

    நமது நாட்டுச் சாலைகளில் இத்தகைய தானியங்கி வாகனங்கள் இயங்கும் காலம் வருமா? வராது என்று உறுதியாகக் கூறுகிறார் மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி. ஆனால் காலம் எதையும் மாற்றும் வல்லமை கொண்டது. மாற்றம் ஒன்றுதான் மாறாது இருப்பது என்பர் அறிஞர். பொறுத்திருந்து பார்ப்போம்.

    ஒன்று மட்டும் உறுதி. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு  மனிதர்கள் கார் ஓட்டினார்கள் பேருந்து ஓட்டினார்கள் என்பதை யாரும் நம்பமாட்டார்கள்.
நம் நாட்டிலும்தான்.
.............................................

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

Wednesday, 20 September 2017

கனடாவின் மறு பக்கம்

   என்னுடைய பயணக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாகப் படித்த எனது முன்னாள் மாணவர் ஒருவர், “கனடா என்ன உலகின் சொர்க்க பூமியா” என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

Saturday, 16 September 2017

சிறுகதை

ஆவது பெண்ணாலே

   அந்த ஒரே பேருந்தைத் தவறவிட்ட இலக்கியா தனியாகத் தவித்துக் கொண்டிருந்தாள்.

என் காரை நிறுத்தி, “இலக்கியா வாம்மா... பின்னால் ஏறிக்கொள்” என்றேன்.