Thursday 2 July 2015

பெண்மை வாழ்க

       இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் நான் நானாக பணிநிறைவு பெற்றுக்கொள்ளும் நாள் வரும். அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த இரண்டு மாத விடுப்பில் அமெரிக்கா வருகை அமைந்துள்ளது.
காலை ஆறு மணிக்கு முன்னதாக எழுவதிலிருந்து இரவு பத்து மணிவரை பகல் தூக்கம் உட்பட எல்லாம் நிதானமாக நடக்கின்றன.

    நாள் தவறாமல் நம் நாட்டுச் செய்திகளை எனது மடிக்கணினியில் இ பேப்பர் மூலம் தெரிந்து கொள்வதுண்டு. அதோடு  அமெரிக்க ஆங்கிலம் புரியாவிட்டாலும் கூட தொலைக்காட்சி பார்ப்பதும் அன்றாட நிகழ்வில் அடங்கும். பாக்க பாக்கதான் என்னைப் பிடிக்கும் என்று நம்மூர் தனுஷ் ஏதோ ஒரு படத்தில் கூறுவார். அதுமாதிரி அமெரிக்க ஆங்கிலம் பார்க்கப் பார்க்க, கேட்க கேட்கதான் புரியும். பிறகு பேசப் பேசப் பிடிபடும். செந்தமிழும் நாப்பழக்கம் ஆங்கிலத்திற்கும் அதே பழக்கம் என்று அடிக்கடி எனது மாணவர்களிடத்தில் கூறுவேன்.

    நாளேடுகள் தொடங்கி தொலைக்காட்சி வரை இங்கே இப்போது சூடாகப் பேசப்படும் செய்தி என்ன தெரியுமா? இனி  ஆணும் ஆணும் திருமணம் செய்ய, பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்ய பச்சைக் கொடி காட்டிவிட்டார் ஒபாமா என்ற செய்திதான்.

  ஆதாம் ஏவாள் தொடங்கி  இன்றுவரை புனிதமாகப் பேசப்பட்டு வந்த ஆண் பெண் திருமணம் அதன் புனிதத்தை, மகத்துவத்தை இழந்து விட்டதென புலம்பும் பெரிசுகள் ஒருபுறம். வொயிட் ஹவுசிற்கு அணி அணியாக சென்று ரெய்ன்போ ஒளியேற்றி ஒபாமாவிற்கு நன்றி தெரிவிக்கும் இளசுகள் மறுபுறம்.

      ஓர் இளைஞனும் ஓர் இளம்பெண்ணும் முறைப்படி திருமணம் செய்து கொண்டு உரிமையோடு கூடி முயங்கும் இன்பத்திற்கு இணையான இன்பம் ஈரேழு உலகிலும் இருக்க முடியாது.

    எந்தையும் தாயும் மகுழ்ந்து குலவி இருந்ததும் இந்நாடே என்று பாரதி சும்மாவா பாடினான். மகிழ்ந்து குலாவும் இன்பத்திற்கென்றே அக இலக்கணம் வகுத்தவன் தொல்காப்பியன்., அகநானூறு, குறுந்தொகை போன்ற அக இலக்கியம் கண்டவர்கள் தமிழர். இவை எதுவும் ஒபாமாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று same sex marriage சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டார். குடும்பம் வேண்டாம் குழந்தை வேண்டாம் எந்தச் சுமையும் வேண்டாம் என வாழ விரும்பும் சோம்பேறிகளுக்கான சட்டம் இது என்பேன். இது ஓர் இமாலயத் தவறு., வரலாற்றுப் பிழையும் கூட.


   இந்தச் சூழலில் இந்தியாவில் நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கிய மகத்தான தீர்ப்புதான் என்னை நம் நாடு இருக்கும் திசை நோக்கி நின்று தலைக்கு மேலே கைகளைக் கூப்பி வணங்க வைத்தது.

    ஒரு பெண்ணைக் கெடுத்த பாவியை சமரசம் செய்து அவளையே திருமணம் செய்து கொள்ள அழுத்தம் கொடுக்கும் செயல் கண்டிக்கத்தக்கது., அத்தகைய செயல் பெண்மைக்கு இழுக்குச் சேர்ப்பதாகும். பெண்களின் உடல் ஆலயம் போன்றது. அதன் புனிதத்தைக் கெடுத்தோருக்குத் தண்டனை வழங்கியே ஆக வேண்டும்.” என்று தீர்ப்பு வழங்கிய மாண்பமை நீதிபதிகளின் கால்களில் பணிந்து மானசீகமாக வணங்குகிறேன்.

   பெண் என்பவளைப் பெற்றோர், உற்றோர், மற்றோர் என அனைவரும் அவளுடைய பெண்மைக்கு, பெருமைக்குப் பாதுகாப்பாக நிற்க வேண்டும் என்பதுதான் இத் தீர்ப்பின் அடிநாதம்.

  மங்கையராய்ப் பிறப்பதற்கே – நல்ல
  மாதவம் செய்திட வேண்டும்மா
                    -கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
என்றும்,

 பெண்ணின் பெருந்தக்க யா உள(குறள்)

என்றும் பெண்கள் நினைக்கும்படியாய் நாடும் வீடும் அமைய வேண்டும். வயலில், வாய்க்காலில், பள்ளியில், பயணத்தில், பணியிடத்தில், வீட்டில், வெளியில் என எங்கும் அவளுடைய கற்புக்குக் களங்கம் நேராத நற்சூழல் அமைய வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது நம் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு.

   பெண்களின் உடல் ஆலயத்திற்கு ஒப்பானது என்னும் அத் தீர்ப்பு வரி பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும். பொன்மொழிப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். பொழுதுக்கும் இதை நாம் சந்திப்பவர்களிடம் சொல்ல வேண்டும்.

                பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமியர் காதலித்தல், பெண் சீண்டல்(Eve teasing) அடுத்தவன் மனைவியை விரும்புதல்(Adultery) மற்றும் கற்பழிப்புக் காட்சிகள் போன்றவை சின்னத்திரை பெரியத் திரைகளில் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டால் பாலியல் குற்றங்கள் பாதியளவாகக் குறைந்துவிடும். வயதுக்கு வந்த பெண்கள் விழிப்புணர்வோடு தற்காத்துக் கொண்டால் இன்னொரு கால்பகுதிக் குற்றங்கள் குறைந்துவிடும். பெண்குழந்தைகளைப் பெற்றவர்களும் பள்ளி ஆசிரியர்களும் வேலியாய் அதே வேலையாய் இருந்து பார்த்துக் கொண்டால் மற்றொரு கால்பகுதி குற்றங்களும் இல்லாமல் ஒழியும்.

    வீட்டில் நாட்டில் பெண்மை நலம் கெட்டால் மற்ற எல்லா நலங்களும் கெட்டொழியும். இதை உணர்ந்தவன் பாரதி. அவனுக்கு உணர்த்தியவள் நிவேதிதா. அதனால்தான் பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்று கூவினான்.

   இதைச் சொல்லித் தராத கல்வியால் கடுகளவும் பயனில்லை.

என்ன நான் சொல்வது சரிதானே?

DR A GOVINDARAJU from Bedford, Dallas, Texas State, USA



6 comments:

  1. அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ் மாண்பை நினைவு கூறும் தங்கள் கட்டை அருமை. நன்றி.
    அன்புடன்,
    கோவி.ரவி, ஆசிரியர், கரூர்.

    ReplyDelete
  2. அய்யா, முன்னர் அனுப்பிய செய்தியில் பிழை நேர்ந்து விட்டது. மன்னிக்கவும்.
    அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ் மாண்பை நினைவு கூறும் தங்கள் கட்டுரை அருமை. நன்றி.
    அன்புடன்,
    கோவி.ரவி, ஆசிரியர், கரூர்.

    ReplyDelete
  3. நூற்றுக்கு நூறு உண்மை ஐயா...

    ReplyDelete
  4. இந்தியப் பண்பாட்டிற்கும் அமெரிக்கப் பண்பாட்டிற்கும் உங்கள் கட்டுரையின் கருத்துக்களே சான்று.

    ReplyDelete
  5. very very correct sir. As usual superb. I personally thank you on behalf of all the women of INDIA.

    ReplyDelete
  6. தங்கள் கட்டுரையின் கருத்துக்கள் அருமை... அழகு...ஆனந்தம்

    ReplyDelete