Friday 18 March 2016

மெல்லத் தமிழ் இனி வாழும்

   இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள்  வளர்ந்து பெரியவர்களாகும்போது எழுத்தாளர்களாக, கவிஞர்களாக உருவெடுப்பார்கள். என்ன அழகாக எழுதுகிறார்கள்! கண்களில் ஒற்றிக் கொள்ளலாம்! பக்கம் பக்கமாகப் படித்தாலும் ஓர் எழுத்துப் பிழையை, ஓர் ஒற்றுப் பிழையைக் காண முடியவில்லை! நூற்றுக்குப் பத்துக் குழந்தைகள் அப்படி எழுதுவதாக  நினைக்காதீர்கள். அத்தனைக் குழந்தைகளும் தவறில்லாமல் எழுதுகிறார்கள்.


   இரண்டு நாள் தேர்வுகளும் முடிந்த பின்னர் மயங்கொலிகள் நிறைந்த சொற்களைச் சொல்லி எழுதச் சொன்னேன். அரிவாள், அரிசிப்பொரி, தீப்பொறி, அடுப்புக்கரி, ஆட்டுக்கறி, தழை, தலை, தளை  எனப் பல சொற்களைச் சொன்னேன். ஒரு தவறு கூட இல்லாமல் எழுதி என்னைத் தலைகுனிய இல்லை இல்லை  தலைநிமிரச் செய்து விட்டார்கள். இவர்களால்தான் தமிழ் வாழப்போகிறது என இருமாந்து விண்ணுக்கும் மண்ணுக்குமாகக் குதித்தேன்.

   “எந்தப் பள்ளி அது? எந்த ஊரில் இருக்கிறது?” என்றெல்லாம் கேட்பீர்கள்; ஆனால் உங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிகளில் சேர்க்கமாட்டீர்கள். டாலர் கனவில் திளைக்கும் நீங்களும் சேர்க்கமாட்டீர்கள். அதே கனவில் மிதக்கும் உங்கள் குழந்தைகளும் நான் குறிப்பிடும் பள்ளிகளில் சேர முன்வர மாட்டார்கள்.. அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூட தம் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் அல்லது சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.

      கடந்த இரண்டு நாள்களாக கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அரசு மேனிலைப்பள்ளியில் தலைமைக் கண்காணிப்பாளராகப் பணி ஏற்று பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்தி வருகிறேன். உப்பிடமங்கலம், பொரணி, சின்ன சேங்கல், கருப்பூர் அரசுப்  பள்ளிகளைச் சேர்ந்த 173 குழந்தைகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழ் முதல்தாள் மற்றும் இரண்டாம்தாள் தேர்வின் போது கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பார்த்ததைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தேன்.

    தேர்வுப் பணி முடிந்து வெளியில் வந்தபோது அவர்களிடம் ஆசை ஆசையாய்ப் பேசினேன். தாய்மொழியில் சிறப்பாக எழுதும் வல்லமையை எப்படிப் பெற்றார்கள்? அவர்கள் யாரும் எல்கேஜி யுகேஜி வகுப்பில் படிக்கவில்லை. ஐந்து வயது முழுமையானதும் கிராமத்துத் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து ஆனா ஆவன்னா படிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். தமிழ்வழிப் பள்ளி என்பதால் நாள்முழுவதும் தமிழில் பேசியிருக்கிறார்கள். ஆங்கிலம் தவிர எல்லாப் பாடங்களையும் தமிழ்வழியில் படித்ததால் இயல்பாகவே அவர்களுடைய சொற்களஞ்சியம் பெருகியிருக்கிறது.

   அப்படியே கொஞ்சம் மெட்ரிக் பள்ளிகள் பக்கம் திரும்பிப் பார்ப்போம்.

    மூன்று வயது முடியுமுன் கேஜீ வகுப்பில் சேர்த்து விடுகிறார்கள். தமிழ் பேச வேண்டிய நாவில் ஆங்கிலத்தைத் திணிக்கிறார்கள். தமிழில் பேசினால் தண்டனை. ஹியர் ஆப்டர் ஐ வில் ஸ்பீக்  ஒன்லி இன் இங்லீஷ் என எழுதப்பட்ட அட்டையை குழந்தையின் கழுத்திலே மாட்டிவிடுகிறார்கள். அது ஒன்றும் புரியாமல் விழிக்கிறது. வீட்டில் அப்பா அம்மா தமிழில் பேசுகிறார்கள்; பள்ளியில் ஆசிரியர்கள் தமக்குள் பேசும்போது தமிழில் பேசுகிறார்கள். தான் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என் நினைக்கிறது.

   கிளிப்பிள்ளை சொல்வதுபோல சில ஆங்கில வரிகளை மனப்பாடம் செய்து ஒப்பித்தால் அல்லது எழுதினால் மதிப்பெண் நூற்றுக்கு நூறு. டாடி மம்மி என இரண்டு வார்த்தைகளைக் கேட்டதும் பெற்றோர் ஈன்ற பொழுதினும் பெரிதாய் மகிழ்ந்து போகிறார்கள். மெட்ரிக் பள்ளிகளில் தமிழை முறையாகக் கற்பிப்பாரும் சிலரே; கற்பாரும் சிலரே. பெரும்பான்மையான மாணவர்களுக்கு இரண்டு வல்லின மெய்கள் இணைந்து வாரா என்னும் அடிப்படை விதிகூட தெரிவதில்லை. முயற்ச்சியுடன் வந்து பயிற்ச்சியில்  சேர வரவேற்க்கிறோம் என்றுதானே எழுதுகிறார்கள். தமிழுக்கு அமிழ்தென்று பெயர் சூட்டிய பாரதிதாசனார் இப்படி தமிழ்க் குழந்தைகள் எழுதுவதைப் பார்த்தால் மனம் நொந்து போவாரே! இப்படி அரை வேக்காட்டுக் கல்வியைப் படித்து, பன்னிரண்டாவது வகுப்பை முடிக்கிற போது தமிழும் தெரிவதில்லை ஆங்கிலமும் தெரிவதில்லை என்னும் நிலைதான் நிலைத்து நிற்கிறது. குழந்தை ஓர் ஒட்டுச் செடியைப்போல தமிழின் இனிமையை இழந்து கெட்டுப் போகிறது அல்லது பட்டுப் போகிறது..

    சீனிவாச சாஸ்திரியாரை உங்களுக்குத் தெரியுமா?  சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கும்பகோணம் அரசு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்துபோன ஆங்கிலேயர் அவரை சில்வர் டங் சீனிவாச சாஸ்திரியார் என அழைத்தனர். அவரை அணுகி ஆங்கில  இலக்கணம் கற்றனர். அந்த சீனிவாச சாஸ்திரியார் எந்த சிபிஎஸ்இ பள்ளியில் படித்தார்? மறைமலை அடிகள் தான் எழுதும் நூலுக்கு முப்பது பக்கத்தில் அசத்தலான ஆங்கிலத்தில் முன்னுரை எழுதுவார். அந்தக் காலத்துக் கல்லூரித் தமிழாசிரியர்கள் தம் பிஎச்.டி ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில்தானே எழுதினார்கள்? அவர்கள் எல்லாம் எந்த மெட்ரிக் பள்ளியில் படித்தார்கள்? சொல்லப்போனால் அவர்கள் ஏபிசிடி யை எட்டாம் வகுப்பில்தான் படிக்கத் தொடங்கினார்கள்.

    எவன் ஒருவன் தமிழில் திறமை மிகுந்தவனாக விளங்குகிறானோ அவன்தான் பிற மொழிகளில் திறன் பெற முடியும் என்பார் திரு.வி.கலியாணசுந்தரனார். அவர் சொன்னதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகப் போய்விட்டதே.

    அண்மையில் நன் பார்த்த ஒரு திரைப் படத்தில் வெளி நாட்டில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தினர் சொந்த ஊருக்கு வருகின்றனர். பேரனை அருகில் அழைத்து, “நல்லா படிக்கிறியா? எத்தனையாவது படிக்கிற/” என்று வாஞ்சையுடன் கேட்கிறார் தாத்தா. அவன் திருதிரு என்று விழிக்கிறான். “அப்பா, அவனுக்குத் தமிழ் பேச வராது; ஆங்கிலம் மட்டும்தான் தெரியும்” என்று மகன் கூறக்கேட்டு அந்தப் பெரியவர் வருந்துகிறார். தாய் மொழியாம் தமிழை மறப்பது உயிரைத் துறப்பதற்குச் சமம்.

    மெல்லத் தமிழ் இனிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்று ஒரு பேதை கூறியதாகக் குறிப்பிடுவார் பாரதியார். எங்கே அந்த பேதை சொன்னது உண்மையாகி விடுமோ என மனம் பதைபதைக்கிறது. அதே சமயம் மிகப்பெரும் எண்ணிக்கையில் குழந்தைகள் இன்றும் அரசுப்பள்ளிகளில் படிப்பதைப் பார்க்கும்போது மெல்லத் தமிழ் இனி ஓங்கும் என்னும் ஒரு நம்பிக்கைக் கீற்று உள்ளத்தில் பிறக்கின்றது. அங்கும் இப்போது சில பள்ளிகளில் முதலாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலவழி வகுப்புகளைத் தொடங்கி இருப்பதாக அறிகிறோம். இதுவும் ஒரு விதமான டாஸ்மாக் போதைதான். தெளிவு பெற்ற மதியினாய் வா வா என்பார் பாரதியார். எப்போது நம் மதியில்  தெளிவு பிறக்கப் போகிறதோ?

   அதற்கான காலம் கனியும் என்று காத்திருப்போம்.

குறிப்பு: இப் பதிவுக்குத் தொடர்புடைய ஒரு குறும்படத்தை இணைத்துள்ளேன். இதைத் தயாரித்தவர் யார் எனத் தெரியவில்லை.  யாராய் இருந்தால் என்ன? அவருக்கு நான் தலை வணங்குகிறேன்.



     

4 comments:

  1. யதார்த்தத்தை அருமையாக பதிவிட்டுள்ளீர்கள். தாய்மொழி அறிவினையும் துறந்து, ஆங்கிலத்தையும் அரைகுறையாகக் கற்று இத்தலைமுறை தம்மைத் தாமே ஏமாற்றிக்கொண்டு சென்று கொண்டேயிருக்கிறது. விளைவினை நோக்கும்போது வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  2. குறும்படமும் அருமை ஐயா...

    ReplyDelete
  3. காலம் கனியும்
    கனிந்தே தீரும் ஐயா

    ReplyDelete
  4. Nallavar kaanum kanavu nichchayam palikkum. Mella Thamil Ini Vaazhum. Nandri Anna.

    ReplyDelete