Monday 13 June 2016

1098 இது என்ன எண்?

     கடந்த இரண்டு மூன்று நாள்களாக ஊடகங்கள் குழந்தைகளைப் பற்றி எழுதியும் பேசியும் வருகின்றன. காரணம் ஜூன் 12 ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் தினமாகக் கடைப்பிடிக்கப்படுவதுதான்.



     இனி அடுத்த ஆண்டுதான் குழந்தைகளைப் பற்றிப் பேசுவோம். நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள். நீங்கள் சொல்வதும் சரிதான். நேரு பிறந்த நாளான நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் ஆதலால் அப்போது குழந்தைகளைப் பற்றிப் பேசுவோம்.

    குழந்தைகளைக் கொண்டாடாமல் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடி என்ன பயன்?

  நம் நாட்டில் குழந்தைகளின் மீது ஏவப்படும் வன்முறைகளுக்கு அளவே இல்லை. பட்டியலிட்டால் பக்கம் பக்கமாக நீளும்.

   பாழாய்ப்போன பணத்தைத் தேடி அலையும் பெற்றோர் சிலர் முதல் வகுப்புப் படிக்கும்போதே கொண்டுபோய் விடுதியிலே போட்டுவிடுகிறார்கள். அங்கே பாத்திரம் கழுவும் ஆயா முதல் பார்த்துக்கொள்ளும் காப்பாளர் வரை குழந்தைகளைச் சிறைக் கைதியைப் போல நடத்துகிறார்கள். எங்காவது விதிவிலக்கு இருக்கலாம்.

    ஒரு மூன்றாம் வகுப்புக் குழந்தை கணக்குப் பாடத்தில் கொஞ்சம் மதிப்பெண் குறைவாக வாங்கிவிடுகிறது. ஏதோ குடி மூழ்கி விட்டதைப்போல பெற்றோர் ஆளுக்காள் அக் குழந்தையைத் திட்டித் தீர்க்கிறார்கள்; எட்டி உதைக்கிறார்கள். மதிப்பெண் அட்டையில் கையொப்பம் போட்டுத் தராமல் செய்யும் அடாவடித் தனம் சகிக்க முடியாதது. அந்தக் குழந்தை இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே! அப்பப்பா! அதை அப்பா, அம்மா, ஆசிரியர் யாரும் உணர்வதில்லை.

    முதலில் ஒரு சட்டம் போட்டு மழலையர் வகுப்பை ஒழிக்க வேண்டும். ஐந்து வயது முடிந்தபின்தான் பள்ளியில் சேர்க்க வேண்டும். குழந்தை ஞாயிற்றைக் கண்டதா? திங்களைக் கண்டதா? ஆனந்தமாகத் தூங்கும் குழந்தையை காலையிலேயே உலுக்கு உலுக்கு என்று உலுக்கி, திட்டித் தீர்த்து, எழுப்பிக் குளிப்பாட்டி (இந்தக் களேபரத்தில் அது ஒண்ணுக்கும் போகாது ரெண்டுக்கும் போகாது; அதைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை) பிள்ளைப் பிடிக்கும் வண்டி வந்ததும் திணித்து  அனுப்பிவிடுகிறார்கள். பக்கத்துக் குழந்தையோடு பேசி மகிழும் வயதில் உள்ள பிஞ்சுக் குழந்தைகளை ஆசிரியர்கள் கீப் கொயட், டோன்ட் டாக் என்று சொல்லி நாள் முழுவதும் வாயின் மீது விரல் வைத்தபடி உட்கார வைத்து விடுகிறார்கள். மீறினால் கிள்ளி வைத்துவிடுகிறார்கள் அல்லது மற்றக் குழந்தைகளோடு உட்காராமல் தள்ளி வைத்து விடுகிறார்கள். மாலையில் வீடு வந்ததும் அம்மாவும் தனிப்பயிற்சி ஆசிரியரும் அதைச்சொல்லு இதை எழுது என்று வாட்டி வதைத்து விடுகிறார்கள்.

காலையில் கைது
     மாலையில் விடுதலை
            மழலை வகுப்புக் குழந்தைகள்

என்று நான் எப்போதோ எழுதிய ஹைக்கூ இப்போது என் நினைவுக்கு வருகின்றது.

   மாலை நேரங்களில் இப்போதெல்லாம் குழந்தைகள் சேர்ந்து விளையாடும் காட்சியைப் பார்க்க முடிவதில்லை. நூற்றுக்கு நூறு மதிப்பெண் என்னும் பெற்றோரின் ஆசைத் தீயில் பிள்ளைகளின் விளையாட்டுக் கனவு எரிந்து சாம்பலாகிவிடுகிறது. ஒரு பள்ளி மாணவி- பெயர் க.பூவிழி அவள் எழுதியக் கவிதையை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அவள் எழுதுகிறாள்:

போடா பாரதி பொய்சொல்லி- நீ
சொன்னதை எப்படி செய்யறது?
மாலை முழுவதும் விளையாண்டா
மாஸ்டர் டியூஷனில் கோபிப்பார்.
ஓடி ஆடி விளையாட- எங்க
ப்ளாட்டில் போதிய இடமில்லை
கூடிச் சேர்ந்து விளையாட- எங்க
டாடி மம்மி விடவில்லை!
    அப்பா அம்மா கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் படும்பாட்டை, அன்புக்காக ஏங்கித் தவிப்பதை எழுத்தால் எழுதிக் காட்டிவிட முடியாது. சித்திகள் செய்யும் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் நரக வேதனையை அனுபவிக்கிறார்கள். என்னிடம் மனநல ஆலோசனைக்காக அழைத்து வரப்படும் குழந்தைகள் சொல்லும் சோகக்கதையைக் கேட்டால் எனக்கே கண்ணைக் கட்டும். அதிலும் பெண்குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி கொஞ்சநஞ்சமன்று.

   கட்டுப்பாடு என்ற பெயரில் குழந்தைகளைப் பண்ணைக் கோழிகளைப் போல வளர்ப்பது சரியன்று. மனித வாழ்வில் குழந்தைப் பருவம் ஒருமுறைதான் வரும். அந்தப் பருவத்தில் குழந்தைகளைக்  குழந்தைகளாக இருக்க இந்தச் சமுதாயம் அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்களாகத்தான் இவர்கள் வளர்வார்கள்; வாழ்வார்கள்.

   இன்னும் ஒருவகைப் பெற்றோர் இருக்கிறார்கள். அதிகப்படியான செல்லம் கொடுத்து, பணம் கொட்டிக் கிடக்கிறது என்று ஆறாவது படிக்கும்போதே அலைப்பேசி வாங்கித் தருவார்கள். எட்டாவது படிக்கும்போது லேப்டாப், பத்தாவது வந்ததும் பைக் என வாங்கிக் கொடுத்து வீட்டுக்கும் நாட்டுக்கும் உதவாமல் ஆக்கிவிட்டுத்தான் மறுவேலைப் பார்ப்பார்கள்.

  கட்டுப்பாடு என்ற பெயரில் குழந்தைகளை அடித்து நொறுக்குதல் கூடாது. குறிப்பாகப் பள்ளி ஆசிரியர்கள் அடிப்பது அறவே கூடாது. பக்குவமாகச் சொல்லியும் முன் மாதிரியாக நடந்து காட்டியும் குறும்பு செய்யும் குழந்தைகளைத் திருத்த வேண்டும். மீண்டும் பள்ளிகளில் நன்னெறி வகுப்புகளை நடைமுறைப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்
.
  குழந்தைகள் எவரேனும் அடித்தல், சூடு வைத்தல், பட்டினிப் போடுதல், கெட்ட வார்த்தைகளில் திட்டுதல், பாலியல் கொடுமை செய்தல் போன்ற வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் எனத்தெரிந்தால் உடனே 1098 என்ற கட்டணமில்லாத் தொலைப்பேசிக்குத் தகவல் கொடுத்தால் மிகவும் நல்லது. தகவல் தெரிவிக்கும்போது உங்களைப் பற்றிய விவரம் எதையும் சொல்லத் தேவையில்லை.

குழந்தைகளைக் குழந்தைகளாக வளர்ப்பது பெற்றோரின் கடமை. குழந்தைகளைக் குழந்தைகளாக அன்புடன் நடத்த வேண்டியது பள்ளி ஆசிரியர்களின் கடமை.


7 comments:

  1. ஐந்து வயது நிறைவுற்றபிறகுதான் பள்ளி என்னும் ஓர் நிலையினைக் கொண்டு வருதல் அவசியம்ஐயா

    ReplyDelete
  2. 1098 பற்றி அறிந்தேன். குழந்தைகளுக்கு சமுதாயத்தில் உரிய இடத்தினை நாம் கொடுக்கவேண்டியது நமது கடமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. The present situation of children have been carefully reviewed by each and every one. It is not only the duty of the parents but also schools. Every child should be taught self discipline, self care, sexual abuse and they should be completely released from present way of teaching. Instead of investing for getting marks, investment should be made for gaining knowledge. As Benjamin Franklin says "The investment for getting knowledge will yield a good interest". So we make the today's children to focus on knowledge than digits. Your continuous writing will definitely make a change. Keep on writing.

    ReplyDelete
  4. உங்கள் ஆதங்கம் புரிகிறது உணர்பவர் முதலில் வழிகாட்டிகளாகச் செயல் படல் வேண்டும் 1098 பற்றித் தெரிந்து கொண்டேன். மழலைகளை ஐந்து வயதுக்கு முன் கட்டுப்படுத்துதல் எனக்கு உடன்பாடில்லைஆனால் பெற்றோர்கள் மூன்று வயதிலேயே குழந்தைகள் எழுதப் படிக்க வேண்டுகின்றனர் என்று ஒரு ஆசிரியர் என்னிடம் குறை பட்டுக் கொண்டார் மெயிலில் பதிவைப் படிக்க அழைப்பதை விட பிறர் பதிவுகளுக்குச் சென்று படித்துக் கருத்திட்டால் உங்கள் பதிவுகளைப் பிறர் படிப்பார்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. ஒரு ஆசிரியராக இருக்கும் நீங்கள் சொல்வதுதான் உண்மையின் ஆதாரம். குழந்தைகளின் நலத்தைப் பார்க்காத பெற்றோருக்குச் சரியான அறிவுரை. அவர்கள் மனத்தில் ஏந்தினால் சமுதாயம் உருப்படும்; இல்லையெனில்உடைப்படும்
    - நீதிபதி மூ. புகழேந்தி

    ReplyDelete
  6. ஒரு ஆசிரியராக இருக்கும் நீங்கள் சொல்வதுதான் உண்மையின் ஆதாரம். குழந்தைகளின் நலத்தைப் பார்க்காத பெற்றோருக்குச் சரியான அறிவுரை. அவர்கள் மனத்தில் ஏந்தினால் சமுதாயம் உருப்படும்; இல்லையெனில்உடைப்படும்
    - நீதிபதி மூ. புகழேந்தி

    ReplyDelete