Monday 12 September 2016

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?

    பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளர்களுக்கான ஒலிம்பிக் போட்டி அவ்வளவாகப் பேசப்படாத நிலையில் ஒட்டு மொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்கச் செய்தார் பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர்.
courtesy: The New Indian Express


   ஊடகக்காரர்களுக்கு அந்த ஊரைக் கண்டுபிடிப்பதே பெரும்பாடாய்ப் போய்விட்டது. சேலத்திலிருந்து பெங்களூரு செல்லும் நெடுஞ்சாலையில் முப்பத்தெட்டு கிலோ மீட்டர் பயணித்தால் தீவட்டிப்பட்டி என்னும் ஊர் வரும். அங்கிருந்து ஒரு பிரிவுச் சாலையில் பன்னிரண்டு கிலோ மீட்டர் பயணித்தால் பெரியவடகம்பட்டி கிராமத்தை அடையலாம். அந்த ஊரைச் சேர்ந்த மாரியப்பன் என்ற இளைஞர்தான் ரியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

      இன்றைக்குத் தமிழ்நாட்டு முதலமைச்சர் தந்த இரண்டு கோடி ரூபாய் பரிசுத் தொகையால் அவர் கோடீஸ்வரர் ஆகிவிட்டார். ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன் “மகனே மாரியப்பா, நான் சொல்வதைக் கேள்; இப்படி வறுமை நெருப்பில் எத்தனைக் காலம் வாழமுடியும்? நாம் அனைவரும் விஷம் குடித்துச் செத்துப் போகலாமே” என மனமொடிந்து பேசிய அம்மாவின் வாயைத் தன் கைகளால் பொத்திய மாரியப்பன், ”அம்மா, நான் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்; கவலையை விடு” என்று கூறியதை இன்று ஆனந்தக் கண்ணீருடன் நினைவு கூருகிறார் சரோஜா என்னும் பெயர்கொண்ட அந்த அம்மையார்.

   பள்ளியில் படிக்கும்போதே விடுமுறை நாள்களில் செங்கல் சூளையில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றியதைக் கண்ணீர் மல்க விவரிக்கிறார்.

     அப்போது  அவனுக்கு ஐந்து வயது. பள்ளிக்கு நடந்து சென்றபோது பின்புறத்திலிருந்து வந்த பேருந்து ஒன்று அவன் மீது மோதி. சக்கரம் ஏறியதில் வலதுகால் கணுக்காலும் பாதமும் கூழானது; நிரந்தரமாகப் பாழானது. இடது காலைவிட வலது காலின் நீளம் குறைந்து போனது. அதுவே அவனுக்கு பாராலிம்பிக்கில் நுழைவதற்கானத் தகுதியாக பிற்காலத்தில் அமையும் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    அம்மாவின் துணையோடு தொடர்ந்து பள்ளிக்குச் சென்றான். படிப்பில் ஆர்வம் காட்டாத அவன் விளையாட்டில் படு ஆர்வமாக இருந்தான். உடல் திறம் மிகுந்த மாணவர்களுக்கு இணையாக கைப்பந்து விளையாடினான். கூடவே தடகளப் போட்டியான உயரம் தாண்டுதலில் தீவிரமாகப் பயிற்சி செய்தான். முறையாகப் பயிற்சியளித்தவர் இளம்பருதி என்பவர். 

    உடற்கல்வி ஆசிரியர் இராஜேந்திரன் என்பவர்தான் இந்த இளைஞரை பாராலிம்பிக் தேர்வுக்குழுவிற்குப் பரிந்துரை செய்தாராம். தீவிரப் பயிற்சி அளித்து உதவியவர் பெங்களூரைச் சேர்ந்த சத்தியநாராயணா என்னும் உலகத்  தடகள வீரர்.

    மாரியப்பனின் அம்மா கணவனால் கைவிடப்பட்டவர். மனைவி, மூன்று மகன்கள், ஒரு மகள் அனைவரையும் நடுத் தெருவில் தவிக்கவிட்டுவிட்டுச் சென்றவர்தான்; பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டன. தங்கவேல் என்பது அவருடைய திருநாமம்!

    சரோஜா அம்மையார் வறுமையுடன் போராடினார். முதலில் வீட்டு வேலைகள், காட்டு வேலைகள் செய்தவர் பின்னர் சைக்கிளில் காய்கறிப் பைகளை மாட்டிக்கொண்டு தெரு தெருவாகச் சென்று விற்றார்.  அதில் கிடைத்த வருமானத்தில்  மாரியப்பனைக்  கல்லூரிக்கும் அனுப்பி ஒரு பட்டமும் வாங்க வைத்தார். மகளுக்குத் திருமணமும் நடத்தி முடித்தார்.

        “எப்படி உங்களால் இந்தச் சாதனையை நிகழ்த்த முடிந்தது?’- இது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரின் கேள்வி. ரியோவிலிருந்து மாரியப்பன் தொலைபேசியில் கூறினார்: “எல்லாம் என் அம்மாவின் வேண்டுதலால்தான்; அதோடு என்னுடைய இடைவிடாத முயற்சியும் பயிற்சியும்”

   தொடர்ந்து அவர் சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ந்து போகிறோம்.”நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த இலண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்தால் இப்போது வென்றது என் இரண்டாவது தங்கமாக இருந்திருக்கும். அப்போது பிறப்புச் சான்று இல்லை என்ற காரணத்தால் பாஸ்போர்ட்டும் விசாவும் கிடைக்கவில்லை.” ஆக வழிகாட்ட யாருமின்றி அப்போது வந்த வாய்ப்பை நழுவ விட்டுள்ளார்.

   1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றுள்ளார் மாரியப்பன். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்பது நம் பழைய திரைப் பாடல். பொறியின்மை யார்க்கும் பழியன்று என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறியவர் நம் பூட்டாதி பூட்டன் திருவள்ளுவர்.

    உடல் ஊனம் என்பது முன்னேற்றத்தைத் தடுக்கும் முட்டுக் கட்டை அன்று என்பதை உலகிற்கு உணர்த்திவிட்டார் மாரியப்பன்.

    இந்தியாவைத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்த மாரியப்பனைத் தலை தாழ்த்தி  வணங்குவோம். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகிற டோக்கியோ ஒலிம்பிக்கில் 1.96 மீட்டர் என்று தற்போது உள்ள உலகச் சாதனையை முறியடித்துத் தங்கம் வெல்ல வேண்டுமென வாழ்த்துவோம்.

   

4 comments:

  1. தங்க மகனைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வாழ்த்துவோம்
    போற்றுவோம்

    ReplyDelete
  3. No doubt Mariyappan will get Gold at Tokyo. I record my sincere appreciation thro this blog. Wish you all the very best Mariyappan. You have proved that 'Poverty also can Win' and also 'Poverty is not a hindrance for achievement.

    ReplyDelete
  4. ’தங்க’ மாரியப்பன் தமிழகத்தைத் தலை நிமிறச் செய்த ’தன்னம்பிக்கை நாயகன்’. முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாய் இருக்குமானால் சாதாரண மனிதனும் சாதனையாளன் தான். ஊனமுற்ற காலோடு முடங்கிக் கிடக்காமல் உயரம் தாண்ட முயற்சித்து அதில் வெற்றியும் கண்ட மாரியப்பனைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. தமிழகத்தில் இவர் போன்ற மாரியப்பன்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்களைத் தமிழக அரசு அடையாளம் கண்டு வாய்ப்பினை வழங்கினால் தமிழ்நாடு தங்கத் தமிழ்நாடாக மிளிரும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்திறமை இருக்கும் அதனை வெளியில் கொண்டு வரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ”வாழநினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்” என்ற பாடல் வரிகளை நினைவில் கொள்ள வேண்டும். ”நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்” என்ற பாடல் வரிக்கேற்ப மாரியப்பனின் தன்னம்பிக்கையைப் போற்றவேண்டும். வாழ்க மாரியப்பன். வெல்க இனிவருங்காலங்களில் என வாழ்த்துகிறேன். முனைவர் ரா.லட்சுமணசிங், பேராசிரியர்

    ReplyDelete