Saturday 15 October 2016

மாமனிதர் ஓ.கு.தி.மறைந்தார்

    இன்று(14.10.16) புலரும் பொழுதில் வந்த தொலைபேசிச் செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனேன். கோபிசெட்டிபாளையத்தில் இயங்கிவரும் புகழ் வாய்ந்த வைரவிழா மேனிலைப்பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர் ஓ.கு.தியாகராசன் அவர்கள் காலமாகிவிட்டதாக  ஓர் உறுதிப்படுத்தப்படாத  செய்தி காதில் விழுந்தது என இந்நாள் தலைமையாசிரியர்  பி.கந்தசாமி தெரிவித்தார்.


   மூன்று வாரங்களுக்கு முன்னால் திரு.ஓ.கு.தி. அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்து வந்தது என் நினைவில் தோன்றியது. மதிய நேரத்தில் சென்ற நான் அவருடன் சேர்ந்து உண்டு, உற்சாகம் பொங்க அளவளாவி மகிழ்ந்தது திரைப்படம்போல் என் மனத்திரையில் ஓடியது. வந்த செய்தி வதந்தியாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு ஓ.கு.தி. மகள் பேராசிரியர் முனைவர் ஓ.தி.பூங்கொடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். “அப்பா போயிட்டாருங்க” என்று அழுதபடி சொன்னார். அப்பாவின் ஆசைப்படி உடலை ஒரு மருத்துவக் கல்லூரிக்குக் கொடையாகத் தர விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

   நான் பெருந்துறை மருத்துவக் கல்லூரியின் தொலைபேசி எண்களை குறுஞ்செய்தியாக அனுப்பினேன். நானே முதல்வருடன் பேசினேன். இறக்கும் முன் பதிவு செய்திருந்தால் மட்டுமே ஏற்க முடியும் என்று கூறிவிட்டார்.

    காலை ஐந்து மணிக்கு எழும் வழக்கமுடையவர் ஓ.கு.தி அவர்கள். இன்றும் அப்படியே எழுந்தார். ” வாந்தி வருவது போல் இருக்குதம்மா கொடி” என்று கூறவும் அம்மாவும் மகளும் ஓடோடி வந்து உதவியிருக்கிறார்கள். அப்படியே மெல்ல வந்து சோபாவில் அமர்ந்துள்ளார். அடுத்த நொடியில் தலை சாய்கிறது. மூச்சில்லை; பேச்சில்லை. நாடித்துடிப்பு அடியோடு குறைந்துவிடுகிறது. ஓ.கு.தி அவர்களின் அக்கா மகளான  மருத்துவர் டாக்டர் பூரணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, ”கொடி நான் சொல்வதைக் கேள். உன் அப்பாவுக்கு வந்திருப்பது ஹார்ட் அட்டாக். உடனே முதலுதவி செய்ய வேண்டும். உன் கை விரல்களை மடக்கியபடி அப்பாவின் நெஞ்சுப்பகுதியில் குத்து. மீண்டும் இதயம் துடிக்கத் தொடங்கலாம்” என்று கூறுகிறார். உலகத்துத் தெய்வங்களையெல்லாம் வேண்டியபடி, அப்பாவின் நெஞ்சில் தன் கைகளால் மாறி மாறிக் குத்திப் பார்க்கிறார். எந்த அசைவும் இல்லை. இதே பெண் சிறு குழந்தையாக இருந்தபோது எத்தனை முறை தன் அப்பாவின் மார்பிலே குத்தியிருப்பாள்? அப்போது அவர் எப்படி எல்லாம் மகிழ்ந்திருப்பார்!

   அடுத்த சில நிமிடங்களில் 108 வருகிறது. ஆய்வு செய்த அரசு மருத்துவர் கையை விரித்து விடுகிறார். ஒரு மலர் காலையில் பூத்து மணம்பரப்பி மாலையில் உதிருமே அப்படி உதிர்ந்துவிட்டார். மரத்தின் பழுத்த இலை ஒரு தென்றலின் வருடலில் உதிருமே அப்படி உதிர்ந்துவிட்டார்.

    அப்பாவின் மறைவுக்காக அழுவதைவிட அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த மகள் பூங்கொடி செயலில் இறங்கினார். உடல் தானம் தொடர்பாக 104 எண்ணுக்குத்  தொடர்பு கொண்டு பேசினார். கிராம நிர்வாக அதிகாரியுடன் பேசினார். தேவையான ஆவணங்களைத் தொகுத்தார். உறைகுளிர் பெட்டியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வண்டிக்கு ஏற்பாடு செய்தார். கோவை மருத்துவக்கல்லூரிக்கு உடலை எடுத்துவருமாறு தம்பி கண்ணனிடம் கூறிவிட்டு, தன் கணவர், அம்மா மற்றும் மகளுடன் தனிக்காரில் முன்னதாக கோவைக்கு விரைந்தார்.

  மறைவுச் செய்தி உறுதி ஆனதும், கரூரிலிலிருந்து 120 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஓடத்துறைக்கு நானும் என் துணைவியாரும் விரைந்தோம். எங்கள் கார் கவுந்தப்பாடியைத் தாண்டி ஓடத்துறை பிரிவுச் சாலைக்குள் திரும்பவும்  எதிர்த் திசையிலிருந்து  உடலுடன் ஆம்புலன்சில் அவர்கள் வரவும் சரியாக இருந்தது. ஆம்புலன்ஸ் வண்டியை சற்றே நிறுத்தி, உறைகுளிர் பெட்டியில் மீளாத் தூக்கத்தில் இருந்த மாமனிதரின் முகத்தை மட்டும் காட்டினார்கள். மனிதப் பிறவி எடுத்துச் செய்துமுடிக்க வேண்டிய பணிகளை நிறைவாகச் செய்துமுடித்த மன நிறைவை அவர் முகக் குறிப்பு காட்டியது. கைகூப்பி விடை கொடுத்து அனுப்பினோம். இன்னும் பத்துநிமிடம் தாமதமாகச் சென்றிருந்தால்கூட  அவருடைய முக தரிசனம் கிடைத்திருக்காது. உண்மையில் நான் கொடுத்து வைத்தவன்.


   கோவை மருத்துவக் கல்லூரியில் சான்றொப்ப வழக்குரைஞர் முன்னதாக வந்து காத்துக்கொண்டு இருந்தார். அவர் முன்னிலையில் உரிய ஆவணங்களில் கையொப்பமிட்டனர்.  அடுத்த அரை மணி நேரத்தில் மாமனிதரின் உடல் வந்து சேர்ந்தது. “நீங்கள் செய்துள்ள உடல் தானம் மகத்தானது. நன்றி. இது மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும். அனைவரும் உடலைக் கடைசியாக ஒருமுறை பார்த்துக்  கொள்ளுங்கள்” என்றார் மருத்துவ அதிகாரி. “அரைமணி நேரம் அவகாசம் கொடுங்கள்” என்றார் மகள் பூங்கொடி. அப்பாவை ஆசை ஆசையாய்ப் பார்த்துக்கொண்டு நின்றார்; வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே நின்றார்; இல்லை இல்லை தன் ஆழ்மனதில் பதிவுசெய்துகொண்டே  நின்றார். கண்கள் குளமாகி அருவியாய் மாறின. முப்பது நிமிடங்கள் மூன்று நிமிடங்களாய்க் கரைந்தன. எல்லோரும் கைகூப்பி விடைகொடுக்க உதவியாளர்கள் உடலை வெண்துகிலால் மூடி குளிர்பதனக் கூடத்திற்கு எடுத்துச் சென்றனர். மகன் வழிப் பேத்தியும் மகள் வழிப்பேத்தியும்  பாட்டியை கைத்தாங்கலாக காருக்கு அழைத்துச் சென்றார்கள்.

  25.10.1933இல் குப்பணக் கவுண்டர் காளியம்மாள் இணையருக்குத் தவப்புதல்வராய்த் தோன்றியவர். முயன்று படித்துப் பலப்பலப் பட்டங்களைப் பெற்றவர். ஆசிரியப் பணியை அறப்பணியாகச் செய்தவர். அதற்காகவே டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் புலமை மிக்கவர். எழுதவும் பேசவும் வல்லவர். தமிழ் மொழியையும் திருக்குறளையும் தம் இரு கண்களாகப் பாவித்தவர். ஓடத்துறை வரலாறு என்னும் ஒப்பற்ற  நூலை எழுதியவர்.


   நான் தமிழாசிரியராக அவர் என் தலைமையாசிரியராக பதினான்கு ஆண்டுகள் இணைந்து பணியாற்றிய காலம் உண்மையில் பொற்காலம்.; தூசு படிந்து கிடந்த பள்ளியைத் தூக்கி நிறுத்தியவர். என்னைச் செதுக்கியவர்; அவருக்கு அடுத்தப்படியாக என்னைத் தலைமை ஆசிரியராக ஆக்கி அழகு பார்த்தவர்; ஆருயிர் நண்பர்; வழிகாட்டி. யாதுமாகி இருந்தவர்.

   யான் வாழும் வரையிலும் என் நெஞ்சகத்தில் நிலைத்து வாழ்வார்.


குறிப்பு: முன்னாள் மாணவர்கள் இரங்கலைத் தெரிவிக்க-9842765361

5 comments:

  1. மாமனிதரில் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

    ReplyDelete
  2. மிகவும் வருந்ததக்க செய்தி
    எமது பள்ளியின் ஒரு மாமனிதர்
    அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மனிதனாகப் பிறந்து, தான் பிறந்த பிறப்புக்கு எடுத்துகாட்டாக விளங்கியுள்ளார் மதிப்பிற்குரிய அய்யா தியாகராஜன் அவர்கள். ”தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றினும் தோன்றாமை நன்று” என்கிறார் வள்ளுவர். அதன்படி வாழ்ந்து தனது ஊரின் பெயரை உலகுக்கு ஆவணமாக்கியுள்ளார்.ஆசிரியராகத் தனதுப் பணிக்காலத்தில் சுயநலம் கருதாது பொதுநலத்தோடுப் பணியாற்றியதால் ஆசிரியப்பணிக்கும் பெருமை சேர்த்துள்ளார். வாழும் காலத்தில் ஆசிரியராக இருந்து பழுமரம் போல பயனுள்ளவராக வாழ்ந்துள்ளார். இறப்பின் பிறகும் அதேப் பண்போடு தனது உடலையும் தானமாகத் தந்து மீண்டும் பழுமரமாகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். இத்தகைய மனிதமனம் கொண்டவர்களாலேயே இவ்வுலகம் நிலைபெற்றிருக்கிறது எனலாம். நல்ல மனம் படைத்தவர், நல்ல சேவைகளைச் செய்தவர், நாலு பேர் போற்ற வாழ்ந்தவர் எனவே அன்னார் இறந்தாலும் இப்பூவுலகில் இறவாப் புகழுடன் வாழும் பேறு பெற்றவராகிறார். அய்யா அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    டாக்டர்.ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
    கரூர் - 639 005

    ReplyDelete
  5. ஐயா தாங்கள் ஒ.கு.தி.அய்யா அவர்கள் மறைவிற்கு எழுதிய கட்டுரையைப் படித்து கண் கலங்கி விட்டேன். கடந்த இரண்டு வாரங்களாக உங்கள் வலைப்பக்கத்தைப் படித்து வருகிறேன். என்னால் இன்னும் நம்ப முடியவில்லை நான் உங்களோடு பணியாற்றுகிறேன் என்று. எனது நினைவலைகள் வைரவிழாப் பள்ளியின் ஆல மரநிழலில் நிலைகொண்டே உள்ளது. உங்கள் மாணவன் என்பதில் பெருமைமட்டுமல்ல கர்வம் கொள்கிறேன். நீங்கள் பல்லாண்டு நலமா வாழவேண்டும் தமிழ் செழிக்கமட்டுமல்ல என்னைப் போன்ற நல்லமாணவர்கள் செழிக்க.

    ReplyDelete