Thursday, 17 August 2017

செய் அல்லது செத்துமடி

     மரங்களைத் துதித்தவர்கள் நம் முன்னோர். பதச் சோறாக, கோவில்களில்  தல விருட்சம் என்னும் பெயரில் ஒரு மரத்தை  வளர்த்து வழிபடுவதைக் .குறிப்பிடலாம். சிறு தெய்வங்களான ஐயனார், கருப்பசாமி, வீரனார், பத்ரகாளி சிலைகள் யாவும் மரங்கள் சூழ்ந்த இடங்களில்தாம் இருக்கும். இவை கோவில் வனம் என அழைக்கப்படும்.

Saturday, 12 August 2017

இதுவல்லவா அதிசயம்!

    உலகில் ஏழு அதிசயங்கள் மட்டும் உள்ளன என்பதை நான் ஒத்துக் கொள்வதில்லை. முதலில் இப்படி வகைப்படுத்துவதையே தவறு என்கிறேன். ஒருவர் அதிசயம் எனச் சொல்வதை இன்னொருவர் சாதாரணம் என்பார்;  மற்றொருவர் சாதாரணம் என்பதை வேறொருவர் உலக மகா அதிசயம் என்பார்.

Thursday, 10 August 2017

சிறுகதை

கன்னத்தில்  முத்தமிட்டால்
முனைவர்.அ.கோவிந்தராஜூ

   ஒட்டாவா சிவிக் ஹாஸ்பிட்டல் என்பது கனடா நாட்டில் ஆன்டாரியோ மாநிலத்தின் அரசு தலைமை மருத்துவ மனையாகும். ஓர் ஐந்து நட்சத்திர ஓட்டல் போன்று உள்ளது. ப வடிவில் அமைந்துள்ள பத்துமாடிக் கட்டடம். எண்  417 நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு முன்னால் நூறு கார்களை நிறுத்த முடியும். அதிகாலை நேரம் என்பதால் ஏழெட்டுக் கார்களே நிற்கின்றன.

Tuesday, 8 August 2017

ரக்க்ஷா பந்தன் என்னும் உறவுப் பாலம்

   ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முழுநிலா நாளில் சகோதரிகள் தம் சகோதரர்களின் கையில் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ராக்கி கட்டுவது நம் இந்தியத் திருநாட்டின் இனிய பாரம்பரிய நிகழ்வாகும்.

Sunday, 6 August 2017

ஒற்றை மனிதர் வீடுகள்

   இல்லம் வீடு என்பன ஒரு பொருள் குறித்தப் பல சொல்கள் என்றாலும் சற்று எண்ணிப் பார்த்தால் சிறு வேறுபாடு இருப்பது தெரியும். வீடு என்பது மனிதர்கள் வசிக்காத இடம் எனலாம். எடுத்துக்காட்டாக நீண்ட நாள்களாகப் பூட்டிக் கிடக்கும் வீட்டைக் குறிப்பிடலாம்.

Monday, 31 July 2017

எங்கும் திரியும் எந்திர விலங்குகள்

   ஒரு வாரமாக ஒட்டாவா நகரம் முழுவதும் இதே பேச்சுதான். இரண்டு எந்திர விலங்குகள் செய்யும் அட்டகாசம் உண்மையில் கொஞ்சம் அதிகம்தான். இவை தெருக்களில் நடமாடும்போது கார்கள் செல்ல முடியாது. பேருந்துகள் கூட சற்றுத் தடுமாறி தடம் மாறிச் செல்கின்றன.

Wednesday, 26 July 2017

சிறுகதைமூன்றாம் பரிசு
முனைவர் அ.கோவிந்தராஜூ

    “கடலக்கா சட்னியும் தோசையும் இருக்குடா. சாப்டுட்டு போ”
“சரிங்கம்மா” என்று சொல்லிவிட்டு தெருக்குழாயில் குளிக்கப் போனான் குமரன்.

 “எப்பவும் மாதிரி இந்தவாட்டியும் குமரன்தான் முந்தி வரணு முருகா! மொதப்பரிச வாங்குணு முருகா” என்று வாய்விட்டு வேண்டிக் கொண்டாள் வடிவு.

  வடிவு பத்தாம் வகுப்பை எட்டிப்பிடித்தவள்.

  முத்து ஐந்தாம் வகுப்போடு சரி. வகுப்பறையில் தன்னை அடித்த ஆசிரியரின் பைக்கில் இருந்த  பெட்ரோல் டேங்கில் உப்பைப் போட, அதை எங்கிருந்தோ பார்த்த ஒருவன் ஆசிரியரிடம் வத்தி வைக்க, அந்த ஆசிரியர் அவனுடைய எலும்புகளை எண்ணிவிட்டார். அத்தோடு முடிந்தது அவன் படிப்பு.

   இருபது வயது ஆகியும் சாமி மாடாய்த் திரிந்தான். அரசுப்பள்ளி இரவுக் காவலராய் இருந்த அவனுடைய அப்பா ஒரு சாலை விபத்தில் இறந்து போக  கருணை அடிப்படையில் அதே வேலையில் சேர்ந்தான் முத்து.

   வேலை கிடைத்ததும் முத்துவுக்குக் கல்யாண ஆசை வந்தது. தன் மாமன் மகள் வடிவைக் கட்டிக்கொண்டான். அடுத்த ஆண்டே மகன் பிறந்தான். வடிவு ஆசைப்பட்ட மாதிரியே திருப்பூர் குமரன் நினைவாக குமரன் என்று பெயர் வைத்தார்கள்.

 “குமரா போயி அந்த முருகன் படத்தையும் ஒங்க அப்பா படத்தையும் தொட்டுக் கும்புடு. இது ஈரோடு மாவட்ட அளவுல நடக்கிற ஓட்டப்பந்தயம் நீதான் மொதல்ல ஓடியாரணு ஆமாம் பாத்துக்க” கறாராகச் சொன்னாள் வடிவு. இருவரும் அந்த ஒற்றை அறை வாடகை வீட்டைப் பூட்டிக்கொண்டு பள்ளியை நோக்கி நடந்தார்கள்.

   ஓடத்துறை ஓ.கு.தி.நினைவு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிப்பவன் குமரன். அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருப்பவள் வடிவு. குமரன் ஆறாம் வகுப்பு படித்தபோது ஒரு நாள் இரவில்  இடி விழுந்து மாண்டு போனான் முத்து. தலைமையாசிரியரின் பரிந்துரையால் கருணை அடிப்படையில் கிடைத்ததுதான் இந்த வேலை.

      அப்பா இல்லாத பிள்ளையாக இருந்தாலும் அம்மாவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்னும் உறுதியோடு, ஒழுக்கத்துடனும் கட்டுப்பாடுடனும் படித்தான் குமரன். படிப்பில் சுமாராக இருந்தாலும் விளையாட்டில் முதலிடம் பிடிப்பதில் சுட்டியாக இருந்தான்.

   உடற்கல்வி ஆசிரியர் சங்கரப்பன் கொடுத்த தீவிரப்  பயிற்சியில் விளையாட்டில் திறமை மிக்க ஒரு பட்டாளமே உருவாகியிருந்தது. ஓட்டப் பந்தயம் என்றால் ஓ.கு.தி. பள்ளிக்குதான் வெற்றிக் கோப்பை என்பது எழுதாச் சட்டமாக இருந்தது. நகரப் பேருந்தில் கவுந்தப்பாடி சென்று அங்கிருந்து ஓர் இடைநில்லாப் பேருந்தில் ஈரோடு வ.உ.சி திடலை அடைந்தனர்.

    பெயர்களைப் பதிவு செய்துவிட்டு, திடலின் ஒருபக்கம் குமரன் உள்ளிட்ட ஐந்து விளையாட்டு வீரர்களையும் அழைத்துச் சென்று, போட்டிக்கு முன்னர் செய்யப்படும் உடல் தயார்நிலைப் பயிற்சி அளித்தார் சங்கரப்பன். சற்று நேரத்தில் கால் இறுதிப் போட்டிக்கான முதலாம் அழைப்பை அறிவித்தார்கள். அரங்கம் நிறைந்த கூட்டம்; ஆரவாரம் பொங்கி வழிந்தது.
   1500 மீட்டர் ஓட்டப்பந்தயம். தட களத்தில் மூன்றே முக்கால் சுற்று ஓடிவர வேண்டும். காலிறுதி, அரையிறுதி தகுதிச்  சுற்றுகளில் வென்று இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவர்களில் ஓ.கு.தி. பள்ளி மாணவர் இருவர்- குமரனும் அவனுடைய உயிர்த் தோழன் வெற்றிச் செல்வனும்; மற்றப் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் ஆறு பேர்.

   எல்லோரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட  ஓடு பாதையில் உரிய இடத்தில் ஓடுவதற்குத் தயாராக குத்துக் காலிட்டு பாயும் புலிக்கணக்காக நின்றனர். காற்றுத் துப்பாக்கியின் வெடிச் சத்தம் கேட்டதும் சீறிப் பாய்ந்து ஓடினார்கள். பார்வையாளர்களின் கைதட்டல் விண்ணைப் பிளந்தது. குதிரையைப் போல ஓர் ஒழுங்கு முறையில் தலையை ஆட்டிக் கொண்டே குமரன்  ஓடிக் கொண்டிருந்த அழகை எல்லோரும் ரசித்தனர்.

   நான்காவது சுற்றிலும் முதல் ஆளாக  ஓடிக் கொண்டிருந்த குமரன் தன்     நண்பனை  ஓரக்கண்ணால் தேடிப் பார்த்தான். தன்னைத் தொடர்ந்து இரண்டாவதாக வருவது தெரிந்தது.. இன்னும் ஒட வேண்டிய தூரம் சுமார் நூறு மீட்டர்  இருந்தபோது குமரன் ஓடிய ஓட்டத்தில் ஒரு தொய்வு தெரிந்தது. சங்கரப்பன் ஆசிரியர் கவனித்துவிட்டார். கண் மூடி திறப்பதற்குள் வெற்றிச் செல்வன் வெண் கோட்டை முதலில் தொட்டான்; குமரன் மூன்றாவதாக வந்து வெண் கோட்டைத் தாண்டி சுருண்டு விழுந்தான்.

    குமரன் மாலையில் வீடு திரும்பியபோது அவனுடைய அம்மா முகம் கொடுத்துப் பேசவில்லை. எப்போதும் முதல் பரிசு பெற்றவன் மூன்றாம் பரிசுடன் வந்ததும் அவள் இடிந்து போனாள். தன் கணவன் இறந்தபோது அழுது புலம்பியவள் அதற்குப்பிறகு இப்பொழுது அழுதாள்.

   வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தான் குமரன்.
“அம்மா அம்மா ஹெட்மாஸ்டர் வந்திருக்கார்”

  அவசரம் அவசரமாக தன் புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

 “வணக்கம் சார்” என்று சொன்னபடியே நாற்காலியை இழுத்துப் போட்டான் குமரன்.

  “வணக்கம் ஐயா வாங்கயா இப்புடி ஒக்காருங்கயா” என்று கை கூப்பினாள் வடிவு.

  இலேசாக விரிசல் விட்டிருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் கவனமாக அமர்ந்தார் தலைமையாசிரியர் அப்பாவு.

  “தெரியும். நீங்க சோகமாத்தாத்தான் இருப்பீங்கன்னு”

 “ஆமாங்கயா. நீங்களே சொல்லுங்க எப்பயாச்சும் குமரன் மொதப்பரிசை கோட்டவுட்டுப்புட்டு வந்திருக்கானா சொல்லுங்க ஐயா” –வெடித்தாள் வடிவு.

 குமுறிக் குமுறி அழுதாள்.  குமரன் மவுனமாக நின்றான்.

  “இங்க பாருங்கம்மா... இப்ப என்ன ஆச்சின்னு இப்படி அழுகுறீங்க. முதல் பரிசுன்னா ஒசத்தி, மூணாம் பரிசுன்னா கேவலமா?  எப்பவும் ஒருத்தன் முதல் பரிசாவே வாங்க முடியுமா? நாட்டுல வல்லவனுக்கு வல்லவன் இருப்பான்ல.  விளையாட்டுல ஒரு நேரம் ஜெயிக்கிறதும் ஒரு நேரம் தோக்கறதும் இயல்புதாம்மா.

  ஒங்களுக்கு ஒண்ணு தெரியுமா? பாரதியாரு சின்னப் பையனா இருந்தப்ப ஒரு போட்டியில கலந்துகிட்டு பாட்டெழுதி படிச்சாரு. மூணாம் பரிசுதான் கெடச்சிது. மொதப் பரிசு வாங்கின பாட்டு என்னாச்சின்னே யாருக்கும் தெரியல. மூணாம் பரிசு வாங்குன செந்தமிழ் நாடென்னும் போதினிலேங்கிற பாட்டுதான் இப்பவும் நெலச்சி நிக்குது.

 அந்த  மொதப்பரிசு வாங்குன ஆசாமியோட பேரு ஊரு யாருக்காவது தெரியுமா? மூணாம் பரிசு வாங்குன பாரதியாரைத்  தெரியாதவங்க யாராவது இருக்காங்களா சொல்லுங்க.”

  வடிவுக்கு ஞானோதயம் வந்ததற்கான பொறி தட்டியது.  மகனைக் கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டாள்.

  வந்த வேலை  முடிந்தது என்னும் நிம்மதியுடன் விடைபெற்றார் தலைமையாசிரியர் அப்பாவு.

   


Monday, 24 July 2017

உடல் நலத்திற்கான மந்திரக் கோல்

    டாக்டர் வைத்தீஷ் அகர்வால். புது தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் மூத்த மருத்துவர். ஆங்கில நாளேடுகளில் எழுதி வருபவர். நல்ல மனநல ஆலோசகரும் கூட.

Saturday, 22 July 2017

பந்து உங்கள் ஆடுகளத்தில்!


இப்படித்தான் திடீர் திடீரென்று எனக்கு ஹைக்கூ பைத்தியம் பிடித்துவிடும். எடு மடிக்கணினியை; தொடு எழுத்துகளை; இடு பதிவை என ஆரம்பித்து விடுவேன். இல்லை இல்லை ஆரம்பித்து விடமாட்டேன்; விடவே மாட்டேன்.
இப்போது எனது ஹைக்கூ பந்து உங்கள் ஆடுகளத்தில்.

Wednesday, 19 July 2017

மாமணி போற்றுதும்

     நிசப்தம் மணிகண்டன் என வலையுலகத்திலும் மணி என நட்பு வட்டத்திலும் அறியப்படுபவர். அன்று தலைசிறந்த பத்துப் பேர்களில் ஒருவராக ஆனந்த விகடன் அறிவித்தது. இன்று தி இந்து தமிழ் நாளேடு பாராட்டுகிறது.

Monday, 17 July 2017

ஒப்பிலா ஒலி ஒளிக் காட்சி

    ஒட்டாவா நகரில் அடுத்துப் பார்க்க வேண்டிய முக்கிய நிகழ்வு இது. இரவு பத்து மணிக்குத் தொடங்கிய காட்சி முப்பது நிமிடங்களே நீடித்தது. ஆனால் மூன்று நிமிடங்களில் முடிந்துபோன உணர்வு ஏற்பட்டது.

Friday, 14 July 2017

இது வாழும் முறைமையடி பாப்பா

   கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சும்மாவா சொன்னார்கள்? ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. கோடி சேர்த்தால் கோடி நன்மை என்னும் நவீன பொருளியல் சிந்தனை மனித மனத்தில் வேரூன்றி விட்டது. பொருளைத் தேடி மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். வாழ்வின் மாலைப்பொழுதில் திரும்பிப் பார்த்து “என்ன வாழ்க்கையடா வாழ்ந்தோம்?” என எண்ணிப் பார்க்கிறான். வாழத் தெரியாமல் வாழ்ந்ததை எண்ணி வருந்துகிறான். கண் கெட்டபின் சூரிய வணக்கம் சாத்தியமில்லையே! இவர்களைப் பார்த்து திருவள்ளுவர் கைகொட்டிச் சிரிக்கிறார். சிரித்து ஓய்ந்ததும் ஒரு சிந்தனைக் குறளை இவர்களுக்காக செதுக்கி அளிக்கிறார்:

Sunday, 9 July 2017

போற்றத் தகும் பொதுப் போக்குவரத்து

   பொதுவாக எல்லோருக்கும் காரில் பயணிக்க ஆசைவரும். ஆனால் எனக்கு இங்கே பேருந்தில் பயணிக்க பேராசை வந்தது. கனடா வந்து ஒரு மாதம் ஆன பின்னால் இன்றுதான் அந்த ஆசை நிறைவேறியது. அதுவும் தனியாகப் பயணித்தேன். ஒட்டாவா விமான நிலையம்வரை சென்று திரும்பினேன்.

Wednesday, 5 July 2017

கண்ணை விட்டு அகலாத கவின்மிகு நயாகராசென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு பெரிய மகளின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றபோது இதே சமயத்தில் நயாகரா அருவியைக் கண்டு வியந்தோம். அப்போது அமெரிக்காவில் இருக்கும் நயாகராவைப் பார்த்துவிட்டு, கனடா நாட்டின் அணிகலனாய்த் திகழும் நயாகரா அருவியைக் காண்பதற்கான கனவு விதையை மனத்தில் ஊன்றினேன்.


அந்தக் கனவு என் இளைய மகள் மூலமாக இப்போது நனவானது. இங்கு ஒட்டாவாவில் கட்டுமானப் பொறியாளராகப் பணியாற்றும் நண்பர் குமரேசன் தன் மகிழுந்தைத் தந்ததோடு தானே சாரதியாகவும் வர ஒப்புக்கொண்டார். காலை எட்டு மணிக்குப் புறப்பட்டு இடையில் ஒரு சாலையோர விடுதியில் சற்றே இளைப்பாறிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். 


வழியில் கிங்ஸ்டன் நகரை ஒட்டியிருந்த ஆயிரம் தீவுகள் பகுதியில் இறங்கி ஒரு நோட்டம் விட்டோம். அடுத்த மாதம் இங்குவந்து ஒரு நாள் முழுவதும் படகு சவாரி செய்து ஒரு நூறு தீவுகளையாவது பார்க்கும் திட்டம் உள்ளது. நகரை ஒட்டி விரிந்து கிடந்த கடலில் நூற்றுக்கணக்கில் படகுகள் திரிந்து கொண்டிருந்தன. அவை மட்டுமா திரிந்தன? வண்ண வண்ண வாத்துகளும் நம் இலக்கியத்தில் வரும் இணைபிரியா அன்றில் பறவைகளைப்போல நீந்தித் திரிந்தன. அவற்றையெல்லாம் அண்மையில் தந்தையர் நாள் பரிசாக மகள் எனக்கு வழங்கியிருந்த வீடியோ கேமிராவில் பிடித்துப் போட்டுக்கொண்டேன். பயணம் தொடர்ந்தது.

மாமியார் வீட்டுக்கு ஓய்வாக வந்து ஒருவாரம் தங்கிய மருமகனைப்போல் மழையும் தூறலும் சில நாள்களாகத் தொடர்ந்து இருந்தது. கடும் மழையிலும் விரைந்தோம். 2.30 மணிக்கு டொரண்ட்டோ நகரின் மையப்பகுதியில் காரை நிறுத்தினார்கள். எட்டிப் பார்த்தால் நம்மூர் சரவணபவன் கண்ணில் பட்டது. பஞ்சாபி ஒருவர் பெயர் உரிமை(Franchise) ஏற்று உணவகத்தை நல்லமுறையில் நடத்துகிறார். 


அந்த உணவகத்தில் தட்டேந்தி முறையில்(Buffet system) உண்ண, தின்ன, பருக, கடிக்க, நக்க என பதினாறு வகையான பதார்த்தங்களை வேண்டுமளவு எடுத்து வயிறார உண்டு மகிழலாம். அவ்வப்போது ஓர் பஞ்சாபி இளமங்கை இளநகையுடன் வந்து சூடான தோசை பூரிகளைப் பரிமாறிச் சென்றாள். தட்டில் உணவை மீதி வைத்தால் ஒரு டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமாம். வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் எடுத்ததை முழுமையாக உண்டு விடுங்கள் என்னும் பொருள்பட Take all you eat and eat all you take என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததை மீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன். நல்ல வேளை நாங்கள் ஒரு பருக்கையைக் கூட வீணடிக்கவில்லை பற்றுக்கோடு அட்டையை(Debit Card) உரசி ஐவருக்கும் சேர்த்து ஐம்பத்தைந்து டாலரை செலுத்தியதோடு, சில பாராட்டு வார்த்தைகளையும் சொல்லிவிட்டு வெளியே வந்தோம். 

அருகிலிருந்த டொரண்ட்டோ பொது நூலகத்தை எட்டிப் பார்த்துவிட்டு நேரே விமான நிலையம் சென்றோம். அது கனடாவின் மிகப்பெரிய பன்னாட்டு விமான நிலையம் ஆகும். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய என் மகளின் கல்லூரித் தோழி சத்யாவை வரவேற்றோம். அவள் எங்களின் இன்னொரு மகள் மாதிரி பழகுவாள். அவள் இருக்குமிடத்தில் உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொள்ளும். எங்களுடன் அவளையும் அழைத்துக்கொண்டு நயாகராவை நோக்கி விரைந்தோம். 

இப்போது ஓட்டுநர் இருக்கையில் என் மகள் புவனா. கவனம் சிதறாமல் காரை ஓட்டிய அழகை இரசித்தபடி பின் இருக்கையில் அமர்ந்து இருபுறமும் 120 கிலோமீட்டர் வேகத்தில் பின்னோக்கிப் பயணித்த மரங்களையும் கட்டடங்களையும் பார்த்துக்கொண்டே சென்றேன். 

மாலை சரியாக எட்டு மணியளவில் நயாகரா நகரில் நுழைந்து உரிய இடத்தில் வண்டியை நிறுத்தினாள். பொழுது சாய்வதற்குள் நயாகரா அருவியைப் பார்த்துவிட வேண்டும் என்னும் முடிவோடு ஓட்டமும் நடையுமாக விரைந்தோம்.

நயாகரா அருவி பேரழகின் பெட்டகமாகத் திகழ்ந்ததைக் கண்டு வியப்பில் கத்தினோம். சமையலறை மேடையில் அம்மா வைத்திருந்த பாலை ஒரு பூனை தள்ளிவிட்டால் எப்படிப் பரவி அங்கிருந்து தரையில் கொட்டுமோ அப்படித்தான் சமவெளிப் பகுதியிலிருந்து பாலெனப் பரவி பட்டென கீழ்நோக்கிக் குதிக்கிறது நாம் பார்க்கும் இந்த நயாகரா அருவி.


பரண் மீதிருந்த பாலைக்
கவிழ்த்து விட்டது யார்?
அருவி


என்று எப்போதோ நான் எழுதியிருந்த ஹைக்கூ கவிதை நினைவில் தோன்றி மறைந்தது.
அருவி நீர் ஆறாக மாறி ஆர்ப்பரித்து ஓடும் அழகே அழகு! ஆற்றின் இந்தப்பக்கம் கனடா அந்தப்பக்கம் அமெரிக்கா. இரு நாடுகளையும் இணைக்கிறது ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மிகப் பழமையான ஓர் இரும்புப் பாலம். பாஸ்போர்ட்டும் விசாவும் கைவசம் இருந்தால்தான் அந்தப் பாலத்தைக் கடக்க முடியும். இங்கே அருவியை ஒரு பறவையைப்போல மேலிருந்து காண்பதற்காக 168 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தைக் கட்டியுள்ளார்கள். ஸ்கைலன் டவர்(Skylon Tower) என்று பெயர்.
1867 ஆம் ஆண்டு இந்த அருவி சுற்றுலா பயணியருக்குத் திறந்து விடப்பட்டதாம். கனடா ஆண்ட்டாரியோ மாநிலத்தின் மிகப்பழமையான சுற்றுலாத் தலம் இதுதானாம். 

ஒருவருக்கு படகுக் கட்டணமாக நாற்பது டாலர் (ரூபாய் இரண்டாயிரம்) எனக் கட்டணம் செலுத்தி, மின்தூக்கி மூலம் இறங்கி ஆற்றின் படகுத்துறைக்குச் சென்றோம். படகு மூலம் அருவியின் அருகில் சென்று அருவி நீர் விழும் காட்சியைப் பார்ப்பதற்காக வரிசையில் நின்றோம்.அருவிச் சாரலில் நனையாமல் இருப்பதற்காக சிவப்பு நிறத்தில் ஒரு பாலித்தின் அங்கியைக் கொடுத்தார்கள். இது இல்லை என்றால் தொப்ப ந
னைந்திருப்போம்

Horn Blower என்னும் இரண்டடுக்கு இயந்திரப் படகின் மேற்தளத்தில் ஏறி நின்றுகொண்டு அருவியை நோக்கி முன்னேறினோம். உயரமான இடத்தில் அமைந்திருந்த எல்.இ.டி மின் விளக்குகளிலிருந்து பாய்ச்சப்பட்ட வண்ண ஒளிவெள்ளம் அருவியின் மீது பட்டு வர்ணஜாலம் நிகழ்த்தியது ஏழு வண்ண ஒளிகள் அருவி நீரில் மாறி மாறி விழுந்தது கண்களைவிட்டு அகலாத காட்சியாகும். அந்த இரவு நேரத்திலும் வெள்ளை நிற கடற்காகங்கள் விண்ணில் பறந்தன. பாயும் ஒளிக்கேற்ப அவற்றின் சிறகுகளும் வண்ண மயமாய் மாறி எண்ணத்தைக் கொள்ளை கொண்டன!.


குதிரை லாட வடிவில் அமைந்துள்ள அருவியிலிருந்து சிவந்த நிறத்தில் வழிந்த நீர் அடுத்தகணம் நீலமாக மாறிக் கொட்டியது. மலரின் மகரந்தத்தூள் போன்ற சாரல் துளிகள் எங்கள் மேல் கொட்டின சாரலைப் பொருட்படுத்தாமல் காமிராவை வெளியில் எடுத்துச் சில படங்களை எடுத்தேன். ஒரே ஒரு நிமிடம் மட்டும் அங்கே நின்ற படகு திரும்பி விரைந்தது. கொஞ்ச தூரம் சென்று நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல நின்றது. 


நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த வாண வேடிக்கை வான வேடிக்கையாகத் தொடங்கியது. சிவகாசி வாணங்களை ஒட்டுமொத்தமாக வாங்கி விண்ணில் விட்டதுபோல் அடுத்த இருபது நிமிடங்கள் வெளுத்து வாங்கிவிட்டார்கள். ஒருபக்கம் மனம் மகிழ்ந்தாலும் இன்னொரு பக்கம் வானவெளி மாசடைகிறதே என்ற வருத்தமும் இருக்கத்தான் செய்தது.

பிரிய மனமில்லாமல் அருவியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தோம். குளிர் என்றால் அப்படியொரு குளிர். மனைவி என் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு நடந்தாள். இதற்காகவே அடிக்கடி நயாகராவுக்கு வரலாம் போலிருந்தது! 

இரவு பத்தரை மணி. கொண்டு வந்திருந்த பொடிதடவிய அதி கார இட்லியை அளவாய்ச் சாப்பிட்டுவிட்டு காரில் ஒடுங்கினோம். இப்போது குமரேசன் ஓட்டுநர் இருக்கையில்; அவருடைய இரு கையில் செலுத்துச் சக்கரம்(Steering wheel). சாலையெல்லாம் ஈரம்; 600 கிலோமீட்டர் தூரம்; ஐந்துமணி நேரம்.

இறையருளால் அதிகாலை நேரத்தில் பாதுகாப்பாக ஒட்டாவா வந்து சேர்ந்தோம்..

படுத்துறங்கி நண்பகலில் எழுந்தபோது கண்களை விட்டுத் தூக்கம் அகன்றது; ஆனால் நயாகரா அகலவில்லை.

கனடாவிலிருந்து
முனைவர் அ.கோவிந்தராஜூ

Sunday, 2 July 2017

வாழ்க கனடா

   இன்று ஜூலை ஒன்று
     கனடாவின் 150 ஆவது பிறந்த நாள்.

Friday, 30 June 2017

இதுவே என் இறுதித் தீர்ப்பு

  நண்பர் முருகானந்தம் அவர்கள் முன்னிரவில் என்னைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, “உங்களுக்குப் பிடித்த ஓர் இடத்திற்கு நாளை அழைத்துச் செல்கிறேன். வருகிறீர்களா?” என்றார். அதற்காகத்தான் காத்திருந்தேன்.

Wednesday, 28 June 2017

கல்வியில் சிறந்த கனடா

    கடந்த சில நாள்களாக இந் நாட்டில் வழங்கப்படும் பள்ளிக் கல்வி குறித்து இணையத்தில் அலசி வருகிறேன். மேலும் தொடர்புடைய சிலரிடம் பேசியும் வருகிறேன். குறிப்பாக பள்ளி மாணவர்களிடம்
பேசினேன்.

Sunday, 25 June 2017

ஒரு தேசியக்கொடியின் கதை

    தன் தாயையும் தாய் நாட்டின் கொடியையும் மதிக்காத ஒருவன் இருந்தாலும் இறந்தாலும் ஒரு பயனும் இல்லை. "தாயின் மணிக்கொடி  பாரீர் அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்" என்னும் பாரதியின் பாட்டைப் படித்தால் மட்டும் போதுமா?

Friday, 23 June 2017

கைவண்ணம் இங்கு கண்டேன்

  நாங்கள் கனடா நாட்டுக்கு வந்து இறங்கியதும் நான் என் வலைப்பூ பக்கத்தில் வெளியிட்ட ஒரு கட்டுரைக்கு  வலைப்பூவர் இட்ட பின்னூட்டத்தில், “அழகிய ஏரிகள் நிறைந்த எழில்மிகு நாட்டுக்கு வந்திருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Wednesday, 21 June 2017

இந்து கோவில்களும் இனிய நினைவுகளும்

    கரூரில் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கோவில்களுக்குப் பஞ்சமில்லை. பழமையான பசுபதீஸ்வரர் கோவில், தான்தோன்றிமலை பெருமாள் கோவில் ஆகியவற்றிற்குப் பத்துநிமிட நேரத்தில் சென்றுவிடலாம்.

Tuesday, 20 June 2017

பார்த்து வியந்த பாராளுமன்றம்


இது நாங்கள் பார்த்து வியந்த மூன்றாவது நாட்டின் பாராளுமன்றம். முதலில் பார்த்தது நமது புதுதில்லியில் உள்ள பாராளுமன்றம். இரண்டாண்டுகளுக்குமுன் வாஷிங்டனில் பார்த்தது அமெரிக்க நாட்டின்பாராளுமன்றம்.  

Sunday, 18 June 2017

கோடையைக் கொண்டாடும் நாடு

   ஒட்டு மொத்த கனடா நாடும் ஆண்டுதோறும் எதிர்பார்த்துக் காத்திருப்பது இந்த இரண்டு மாத கோடைக்காலத்தை என்றால் அது மிகையாகாது.

Friday, 16 June 2017

பட்டங்கள் ஆள வந்தாள்

    ‘சான்றோள் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்று சொன்ன சங்கப் புலவர் பொன்முடியார் என் எதிரில் வந்திருந்தால் அவர் வாயில் சர்க்கரையைப் போட்டிருப்பேன். வள்ளுவர் மட்டும் என் எதிரில் வந்திருந்தால் நானும் அவர் வாயில் சர்க்கரையைக் கொட்டியிருப்பேன் என்றாள் தன் மகளைச் சான்றோள் எனக் கேட்ட என் மனைவி.

Wednesday, 14 June 2017

பெரிதினும் பெரிய பேரங்காடிகள்

      முந்தைய பதிவு ஒன்றில் இலங்கைத் தமிழர் அங்கதன் என்பவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவர் பணியாற்றுவது சௌத் ஆசியன் மார்க்கெட் என்னும் சிற்றங்காடி. இப்போது நான் கூறப்போவது ஒரு பேரங்காடியைப் பற்றி.

Monday, 12 June 2017

ஒட்டாவாவுக்கு ஒரு ஓ போடலாம்

   ஒட்டாவா என்பது கனடா நாட்டின் தலைநகரமாகும். ஒட்டாவா நதிக்கரையில் அமைந்துள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பத்து இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்டது எனச் சொன்னால் நம்பமாட்டீர்கள்.

Saturday, 10 June 2017

கனடா கனவு தொடர்ச்சி

     முந்தைய பதிவை எழுதி முடித்துப் பதிவேற்றம் செய்துவிட்டு ‘அப்பாடா’ எனத் தலை நிமிர்ந்தேன். எதிரிலே ஃப்ராங்க்பர்ட் விமான நிலைய அதிகாரி கம்பீரமாக நிற்கிறார்.

Friday, 9 June 2017

கனடா கனவு

   உலகப் புகழ் பெற்ற கார்லட்டன் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ படிக்க வேண்டும். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்து கைநிறைய ஊதியம் பெறவேண்டும். பட்டமளிப்பு விழாவில் மூவரும் பங்கேற்க வேண்டும்.

 கனவு ஒன்று; கனவு கண்டவர் மூவர்.  நான், என் துணைவியார், என் இளைய மகள் புவனா மூவரும் இரண்டாண்டுகளுக்கு முன் கண்ட கனவு இன்று நனவாகிறது.

    6.6.17 அன்று மாலை ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளுடன் மங்களூர் சென்னை விரைவு இரயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அப்படி என்ன மூட்டை முடிச்சுகள்? சரியாக இரண்டாண்டுகளுக்குப் பிறகு மகளைப் பார்க்கப் போகிறோம் என்பதால் இனிப்பு, கார வகைகள், வற்றல், வடகம், பொடிகள் என என் துணைவியார் தன் கையால் தயாரித்து எடுத்துச் செல்வதால் சுமை அதிகமாகிவிட்டது. ஆனாலும் அது ஒரு சுகமான சுமை.

   சென்னையில் சகலை இல்லத்தில் தங்கி பயணம் தொடர்பான சில பணிகளை முடித்துக்கொண்டு   8.6.17 மாலை ஒன்பது மணிக்கு சென்னை விமான நிலையத்திற்குப் புறப்பட்டோம். வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கொண்டு புறப்பட்டோம். அதற்குக் காரணம் எங்கள் பயணச் சீட்டில் என் தந்தையார் பெயரில் இருந்த ஓர் எழுத்துப்பிழைதான். இப்படி பயணச் சீட்டில்  எழுத்துப்பிழை இருந்தால் விமானப் பயணம் மேற்கொள்ள முடியாது என சிலர் வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். அது உண்மையும் கூட. பயணச் சீட்டில் உள்ள பெயரும் பாஸ்போர்ட்டில் உள்ள பெயரும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும். பயண முகவர் செய்த தட்டச்சுப் பிழையைச் சரி செய்ய என் மகள் இருவரும் படாதபாடு பட்டார்கள். ஒரு நாள் முன்னதாக அப்பிழை கண்ணில் பட்டதால் சிக்கல் தீர்ந்தது. இது விமானப் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும்.

    விதிமுறைகளின்படி பெட்டியில் உள்ள பொருள்கள், எடை முதலியவற்றைச் சரியாகச் சோதித்து எடுத்துச் சென்றதால் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. அப்படியிருந்தும் ஒரு பெட்டியில் இருந்த கறிவேப்பிலைப்பொடிமீது சந்தேகம் வந்துவிட்டது. அது குறித்த எனது விளக்கத்தைக் கேட்டதும் அனுமதித்துவிட்டார். இப்படி ஏதாவது சிக்கல்கள் வராமல் இருந்தால் பயணம் சப்பென்றுதானே இருக்கும்? ஒருவழியாக எல்லா சோதனைகளும் முடிந்து நள்ளிரவு ஒரு மணிக்கு லுஃப்தான்சா விமானத்தின் உள்ளே சென்று உரிய இருக்கைகளில் அமர்ந்தோம். ஜன்னல் ஓர இருக்கையை என் மகள் பதிவு செய்து இருந்த்தால்  வேடிக்கைப் பார்க்கவும் படம் எடுக்கவும் வசதியாக இருந்தது.

    1.50 மணிக்குப் புறப்பட  வேண்டிய விமானம் 1.30 மணிக்கே புறப்பட்டது. பணிப்பெண்களின் விருந்தோம்பல் சற்று நேரத்தில் தொடங்கியது. அவர்களுடைய உடல்மொழி, பேசும் விழி, பேசிய மொழி எல்லாமே அழகுதான். உலக அழகிப் போட்டியில் இரண்டாம் சுற்றுவரை சென்ற பெண்களைத் தேடிப்பிடித்துப் பணியில் அமர்த்தியிருப்பார்களோ என்னவோ! நாங்கள் விரும்பிப் பெற்றுக் கொண்ட சைவ உணவு வகையறா மிக நன்றாக இருந்தது. ஆனாலும் அசைவ உணவுக்காரர்களுக்குதான் கொண்டாட்டம்..
   மணிக்கு நானூறு முதல் தொள்ளாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் முப்பதாயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்த வண்ணம் இருந்தது.பயணியர் ஒவ்வொருவரும் தனித்தனி தொடுதிரையில் திரைப்படங்கள் பார்க்கலாம். நான் ஒரு ஜெர்மானிய மொழிப்படத்தைப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. விடிந்ததும் ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்ப்பதே சுகமான அனுபவமாக இருந்தது. ஒரு கட்டத்தில் பாக்தாத் நகரின் மீது விமானம் பறந்தது. இளமையில் நான் படித்த பாக்தாத் திருடன் நாவல் நினைவில் வந்துசென்றது.. ஜெர்மன் நாட்டில் விமானம் பறந்தபோது ஜன்னல் வழியே கண்ட காட்சி மிக வியப்பாக இருந்தது. நாடு முழுவதும் அடர்ந்த காடுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பரவிக் கிடக்கின்றன. ஆங்காங்கே பெரிய ஏரிகளும் நீண்ட ஆறுகளும் நிரம்பி வழியும் தண்ணீருடன் காட்சியளிக்கின்றன. மருந்துக்குக் கூட நீரில்லாத தமிழக ஆறுகள் உடனிகழ்வாக என் உள்ளத்தில் தோன்றி மறைந்தன.


    பத்துமணி நேர தொடர் பறப்புக்குப் பிறகு, எட்டாயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து நலமாக ஜெர்மன் நாட்டின் ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் தரையிறங்கினோம். அடுத்த விமானம் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகுதான் புறப்படும். அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் இப் பதிவை மடிக்கணினியில் தட்டச்சு செய்துகொண்டுள்ளேன்.

Saturday, 27 May 2017

அன்பு மகள் அருணாவுக்கு,

  நலம்தானே? இங்கே அம்மாவும் நானும் நலமாக உள்ளோம். அங்கே அமெரிக்க தட்ப வெப்ப நிலை உனக்குச் சாதகமாக உள்ளதா? உனக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துகள்.

     இன்று படுக்கையை விட்டு எழும்போதே என் அம்மாவின் அன்பு முகம் மனத்தில் தோன்றி நிறைந்தது. நான்கு பத்தாண்டுகள் ஓடி மறைந்து விட்டன. ஆம் 1977ஆம் ஆண்டு இதே நாளில்தான் உன் தேசம்மாள் பாட்டி இயற்கை எய்தினார். அப்போது எனது வயது இருபத்தைந்து. எம்.ஏ முதலாண்டு படித்துக்கொண்டிருந்த காலக்கட்டம்.

    உன் பாட்டியை சாதாரணமாக எண்ணிவிடாதே. அவர் ஒரு தனிப்பிறவி. ஒரு கரும யோகி. ஒரு ஞானி. அமானுஷ்ய சக்தியைப்(Super Natural Power) பெற்றிருந்தவர். இன்றைக்கு உளவியல் கூறும் பல கோட்பாடுகள் அவருடைய வாழ்வில் செயல் வடிவம் பெற்றிருந்தன. ஆனால் அது குறித்து ஏதும் அவருக்குத் தெரியாது. நான் சொல்லப்போகும் செய்திகளை நீ நம்பமாட்டாய். அவற்றுக்கெல்லாம் நானும் பெரியப்பாவும்தான் சாட்சிகளாக உள்ளோம்.

   உளவியலில் தொலைவில் உணர்தல்(Telepathy) என்பதும் தொலைவில் இயக்குதல்(Tele kinetics) என்பதும் காலம் காலமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளாக உள்ளன.

   உன் பெரியப்பா கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாலை கல்லூரி முடிந்து ஒரு பேருந்தைப் பிடித்து சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு வருவார். உன் பாட்டி லாந்தர் விளக்குடன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பார். “பெத்தவாண்டா ராரா” என்று கூறி வரவேற்று அழைத்துச் செல்வாராம். அவருக்கு முனை முறியாத  நெல்லுச் சோறும் சுவையான கோழிக்கறி குழம்பும் தயாராக இருக்கும். தான் வருவது எப்படி அம்மாவுக்குத் தெரிந்தது என வியந்து நிற்பாராம் பெரியப்பா.

   கூவத்தூரில் நாங்கள் வாழ்ந்த பூர்விக இல்லம் வரகு வைக்கோல் கூரையால் ஆனது. உப்பு, அரிசி, புளிப் பானைகளை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்துச் சுவர் ஓரம் சாய்த்து அடுக்கப்பட்டிருக்கும். மூங்கில் கழிகளால் ஆன ஒரு பரண் இருக்கும். கடைக்குட்டியான நான்தான் அப்பரண் மீது ஏறி உன் பாட்டி கேட்கும் பொருளை எடுத்துக் கொடுப்பேன். வாரச் சந்தையில் வாங்கும் பொருள்களைப் பரணில் வைப்பதும் எடுப்பதும் என் வேலை. எல்லாம் சரியாக இருக்கும். வாங்கி வந்த வாழைப்பழங்கள் மட்டும் கணக்கில் உதைக்கும். கணக்கில் வராத பழங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாமல் என் வயிற்றுக்குள் போயிருக்கும்! சரி  விஷயத்திற்கு வருகிறேன்.

   தொலைவில் இயக்குதல்(Tele kinetics) என்னும் கோட்பாட்டின்படி ஒருவர் செடியிலுள்ள மலர்களை தூரத்தில் நின்றபடி உதிரச் செய்ய முடியும். சீறிவரும் காளையை பார்வையால் தடுத்து நிறுத்த முடியும். விபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்ற முடியும்.

    ஒரு புது பித்தளை சொம்பு பரண்மீது ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அன்று இரவு காற்றும் மழையுமாக இருந்தது. அது கீழே விழுந்து நசுங்கிவிடுமோ என எண்ணியபடியே இருந்துள்ளார். என்னை அழைத்து அதை எடுத்துக் கீழே வைக்கச் செய்திருக்கலாம். நான்தான் அன்றிலிருந்து இன்றுவரை தூக்கத்தில் கும்பகர்ணன் ஆயிற்றே. காலையில் பார்த்தால் அது நசுங்கியிருந்தது. இது உன் பெரியாப்பா என்னிடம் அண்மையில் பகிர்ந்துகொண்ட செய்தியாகும்.

  நான் தப்பிப் பிழைத்தக் கதையைக் கேள். வீட்டில் இருந்த மாட்டு வண்டியைக் கூலிக்கு ஓட்டுவதுண்டு. பண்ணையத்து ஆள் நெல் அரவை மில்லில் அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்று ஜெயங்கொண்டம் என்னும் ஊரில் இறக்கிவிட்டு  நாற்பதோ ஐம்பதோ வண்டிச்சத்தமாக வாங்கி வருவார். இரவு நேரத்தில்தான் இப்பணி நடக்கும். ஒருநாள் பண்ணையத்து ஆளுக்கு உடல்நலம் இல்லாததால் நான் வண்டியை ஓட்டிச் சென்றேன். இரவு பதினோரு மணிக்கு மேல் ஜெய்ங்கொண்டத்திலிருந்து வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தேன். இருட்டு என்றால் அப்படி ஓர் இருட்டு. இருட்டை எடுத்துக் குழந்தைக்குத் திருஷ்டி பொட்டாக வைக்கலாம்! வண்டி ஓட்டியவாறு தூங்கிவிட்டேன். ஒரு கட்டத்தில் காளைகள் தம் கழுத்து மணிகளை ஆட்டும் சத்தம் கேட்டு விழித்து எழுந்தேன். வண்டி நம் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருக்கிறது! என்னை எதிர்பார்த்து உன் பாட்டியும் வெளியில் புளிச்ச நார்க் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

  தொலைவில் உணர்தல்(Telepathy) கோட்பாட்டுக்குச் சான்றாக ஒரு நிகழ்வினை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன். கல்லூரியில் படித்த உன் பெருமாள் பெரியப்பா விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். விவசாய வேலையாக கொல்லைக்குச் சென்றிருந்தார். அப்போது மாலை மணி ஆறு இருக்கும். வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்த என்னை உன் பாட்டி அவசரமாக அழைத்து, ”சீக்கிரம் கம்பங்கொல்லைக்கு ஓடு. அண்ணனைத் தேடிப்பாரு” என்றார். ஓடிப் போய்ப் பார்த்தால் கம்பங்கொல்லை கிணற்றில் தவறி விழுந்து கத்திக்கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தோர் துணையோடு அவரைக் காப்பாற்றினோம். உன் பாட்டியின் தொலைவில் உணர்தல் என்னும் உள்ளுணர்வு காரணமாக உன் பெரியப்பா அன்று பிழைத்தார்.

  வானிலை நிலைய இயக்குநர்  ரமணன் எங்கள் அம்மாவின் அருகில் நிற்க முடியாது. உன் பாட்டி மழை எப்போது வரும் என மிகத் துல்லியமாகக் கூறுவார். காலையில் நான் பள்ளிக்குச்  செல்லும்போது குடை கொடுத்தனுப்புவார். மாலையில் வரும்போது நனைந்தபடி வருவேன். குடை இலட்சணம் அப்படி!

    தேசம்மாள் என்னும் தெய்வத்திடம் ஏதோ ஒரு சக்தி இருந்தது என்பது மட்டும் உண்மை.

   நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உன் விருப்பம்.

இப்படிக்கு,

உன்னைப் பெற்றதில் பெருமைகொள்ளும் அப்பா.

Monday, 22 May 2017

ஞானக்கண் -அறிவியல் சிறுகதை (முனைவர் அ.கோவிந்தராஜூ)


   வீட்டிற்கு அருகிலேயே பள்ளிப்பேருந்து நிறுத்தம். பேருந்தில் ஏறிய அனு என்ன நினைத்தாளோ ஏறிய வேகத்தில் இறங்கி விட்டாள்.

Thursday, 18 May 2017

நாயின்றி அமையாது உலகு

 இந்தக் கொளுத்தும் வெயிலில் மனிதர்கள் எப்படியோ சமாளித்துக் கொள்கிறார்கள். பாவம் பறவைகள் விலங்குகள் பாடு திண்டாட்டம்தான். இவைகளைப் பற்றிக் கவலைப்படும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Tuesday, 9 May 2017

ஜருகண்டி புராணம்

   நாங்கள் பரம்பரையாக விரும்பி வழிபடும் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதி. என்னுடைய அப்பா அம்மா இருவரும் திருப்பதி சென்றுவந்த பிறகு நான் பிறந்தேன். அதனால்தான் கோவிந்தராஜூ எனப் பெயரும் இட்டனர். 

Friday, 5 May 2017

அது வண்ணக் கிளி செய்த மாயம்

  சுகவனம் மைசூரு நகரின்  அடையாளமாகத் திகழ்கிறது எனச் சொன்னால் அது மிகையாகாது. 

Saturday, 29 April 2017

உயிரைக் குடிக்கும் உப்பு- சிறுகதை முனைவர் அ.கோவிந்தராஜூ

   “இண்டியன்ஸ் ஆர் ஃபூல்ஸ். தே ஹேவ் இனஃப் மணி பட் நோ ப்ரெய்ன்” என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.

Monday, 24 April 2017

முனைப்புடன் இயங்கும் முன்னோடி நூலகம்

    வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் ஒரே தினம். அது ஏப்ரல் 23. அந்த நாள் தான் உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

Monday, 17 April 2017

இளமையில் துறவு- சிறுகதை (முனைவர் அ. கோவிந்தராஜூ)

     லவ்பேர்ட்ஸ் என்று தங்களை நோக்கி சக மாணவ மாணவியர் விரல் நீட்டிப் பேசுவதை அவர்கள் இருவரும் அறிந்துதான் இருந்தார்கள்.

Sunday, 16 April 2017

கரூரில் விளைந்த கரும்பு

    கி. வா. ஜகந்நாதன் அவர்கள் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் பிறந்தவர் என்பது கிருஷ்ணராயபுரத்து மக்களுக்கே தெரியவில்லை.

Friday, 14 April 2017

ஹேவிளம்பி

அன்பு மகள் அருணாவுக்கு,
  நலம். நலமே சூழ்க. இன்று பிறந்திருக்கும் தமிழ்ப்புத்தாண்டு ஹேவிளம்பி என்பதாகும். இந்த ஹேவிளம்பி ஆண்டுக்குத் தனிச் சிறப்புண்டு என்பது உனக்குத் தெரியுமா?

Thursday, 13 April 2017

மற்றும் ஓர் அப்துல் கலாம்

     அண்மையில் ஒரு மாமனிதரைச் சந்தித்தேன். அவர் பேசும்போது திருக்குறள் மணம் வீசியது. குறட்பாக்களுக்கு அவர் எளிய ஆங்கிலத்தில் தந்த  அழகான விளக்கம் செவிநுகர் கனியென இனித்தது.

Friday, 7 April 2017

மனக் கவலை மாற்றல் எளிது

    இன்று(7.4.17) உலக சுகாதார நாள். உலக சுகாதார நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் இந் நாளைக் குறிக்கும் வகையில் ஒரு கோட்பாட்டு வாசகத்தை அறிவிக்கும். மன அழுத்தத்தைப் பற்றிப் பேசுவோம் என்பதுதான் இவ்வாண்டின் இந் நாளுக்கான வாசகம். எனவே வலைப்பூவில் இதுகுறித்துப் பேசிவிடுவது என எண்ணியதன் விளைவுதான் இப் பதிவு.

Sunday, 2 April 2017

நன்னனும் நானும்

   சென்னை வானொலி நிலையம் ஓர் உருப்படியானச் செயலைச் செய்கிறது. கடந்த ஆறு மாத காலமாக  சனிக்கிழமை தோறும் காலை பத்து மணிக்கு வானொலிப்பெட்டி முன் அமர்ந்து விடுவேன்.

Wednesday, 29 March 2017

மனுஷ்ய புத்திரனும் மதி மயக்கமும்

   ஹமீது என்கிற மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை நான் விரும்பிப் படிப்பதுண்டு.

Sunday, 26 March 2017

வேலை அல்லாத வேலை

     நேற்று நானும் என் மனைவியும் பேரங்காடி ஒன்றுக்குச் சென்றிருந்தோம். பில் போடும் இடத்தில் கூட்டமாக இருந்தது. “நீ எவ்வளவு நேரம்தான் நிற்பாய் போய் காரில் உட்கார்; நான் வருகிறேன்என்று கூறிவிட்டு வரிசையில் நின்றேன்.

Monday, 20 March 2017

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்?

   நம்முடைய எம்.பி.பி.எஸ்; எம்.எஸ் போன்ற பட்டங்களை அமெரிக்க நாடு துளியும் மதிப்பதில்லை. அவர்கள் நடத்தும் ஒரு மருத்துவம் சார்ந்த தேர்வில் தேர்ச்சிப் பெற்றால்தான் அங்கே படிக்க முடியும் அல்லது பணியாற்ற முடியும்.

Wednesday, 15 March 2017

வேட்டையாடும் வெறி நாய்கள்

     இப்படியும் நடக்குமா? நம்பத்தான் முடியவில்லை. ஆங்கில நாளிதழில் விலாவாரியாக எழுதியுள்ளார்களே. ஐந்து வெறி நாய்கள் சேர்ந்துகொண்டு அட்டூழியம் செய்திருக்கின்றன. அதுவும் நம் நாட்டின் தலைநகர் புதுதில்லியில்.

Wednesday, 8 March 2017

மகளிர் நாள் சிறப்புக் கவிதை


கண்ணே! கண்மணியே!
    கண்வளராய் பெண்மணியே!
பண்ணே பைந்தமிழே!
    பண்புள்ள பெண்மகளே!

விண்ணிலே பவனிவரும்
    வெண்மதியும் நீதானோ?
கண்ணிலே ஒளிபேசும்
    கருவிழியும் நீதானோ?

மண்ணிலே பெண்ணாக
    மகளாக வந்து விட்டாய்!
எண்ணிடின் ஏழ்பிறப்பில்
    என்னதவம் செய்தேனோ!

எண்ணென்ப எழுத்தென்ப
    ஏடெடுத்துப் படிமகளே!
கண்ணென்ப கல்வியினைக்
    கருத்தோடு பெறுமகளே!

எண்ணிய எண்ணி யாங்கு
    எய்திடலாம் பொன்மகளே!
எண்ணத்தில் திண்ணம்கொள்
    எழில்மானே! என்மகளே!

                -முனைவர் அ.கோவிந்தராஜூ