Thursday 2 February 2017

உன்னால்தான் உனதுதமிழ் அழியும்

தமிழா நீ பெற்றெடுத்த பிள்ளைக்குத்
தக்ஷிகா என்றொரு பேர்வைத்தாய்! – எனவே
உன்னால்தான் உனதுதமிழ் அழியும்
உன்மீது விழுந்திடுமே பழியும்!


மம்மியென டாடியென அழைத்தபோது
மட்டற்ற மகிழ்ச்சியினை நீயடைந்தாய்! – எனவே
உன்னால்தான் உனதுதமிழ் அழியும்
உன்மீது விழுந்திடுமே பழியும்!

ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தைப் போடுகின்ற
அறியாமை உள்ளதடா ஆணிவேராய் –எனவே
உன்னால்தான் உனதுதமிழ் அழியும்
உன்மீது விழுந்திடுமே பழியும்!

ஈங்குனக்குத் தாய்மொழிஉன் தமிழ்தானே?
ஆங்கிலத்தில் இடுகின்றாய் கையொப்பம்- எனவே
உன்னால்தான் உனதுதமிழ் அழியும்
உன்மீது விழுந்திடுமே பழியும்!

பெரிதாக முயன்றேநீ வீடுகட்டி
புரியாத மொழியினிலே பெயருமிட்டாய்! – எனவே
உன்னால்தான் உனதுதமிழ் அழியும்
உன்மீது விழுந்திடுமே பழியும்!

ஒண்டமிழ்க் குறட்செல்வம் இருந்தபோதும்
ஒழுங்காக நீயதனைப் படிக்கவில்லை – எனவே
உன்னால்தான் உனதுதமிழ் அழியும்
உன்மீது விழுந்திடுமே பழியும்!

அரிசியிலே கற்களையும் கலப்பதுபோல்
அழகுதமிழ் பேசுங்கால் ஆங்கிலமேன்?- எனவே
உன்னால்தான் உனதுதமிழ் அழியும்
உன்மீது விழுந்திடுமே பழியும்!

எண்ணில்லாப் பிழைமலிய எழுதுகின்றாய்
எள்ளளவும் உனக்கதிலே வெட்கமில்லை! – எனவே
உன்னால்தான் உனதுதமிழ் அழியும்
உன்மீது விழுந்திடுமே பழியும்! 

இலக்கணந்தான் வேலியதை ஒதுக்கிவிட்டாய்
எளிதாக பிறமொழிகள் அழித்திடுமே – எனவே
உன்னால்தான் உனதுதமிழ் அழியும்
உன்மீது விழுந்திடுமே பழியும்!

தமிழினத்து மரபுகளைத் தவறவிட்டுத்
தறிகெட்டு ஏனடா நீ திரிகின்றாய்? – எனவே
உன்னால்தான் உனதுதமிழ் அழியும்
உன்மீது விழுந்திடுமே பழியும்!
          -முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்


8 comments:

  1. இக்கவிதை, மொழியே ஒரு இனம் எனவே அதைக்காத்திடு என செவியின் மேல் அடித்துச் சொல்கிறது ஐயா.

    ReplyDelete
  2. உண்மை ஐயா
    உண்மை
    ஆயினும் தமிழ் தழைக்கும்

    ReplyDelete
  3. Yes, there are many people who mix Tamil and English. Even Tamil teachers do it. They use too much of English words. Prof.Pandiaraj

    ReplyDelete
  4. அருமையான உண்மை வரிகள்.

    ReplyDelete
  5. நன்றாக இருக்கிறது! நான் தமிழ் அழியாது என்கின்றேன்; நீங்கள் அழியும் வழிகளைக் கூறி எச்சரித்துள்ளீர்கள்.

    நன்றே! நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete