Thursday 9 February 2017

கணவன் பெயரைச் சொல்லலாமா?

    நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பேருந்து பயணத்தில் கண்ட காட்சி இப்போது நினைவுக்கு வருகிறது.

   “ஏம்மா காசை எடு; எந்த ஊருக்கு டிக்கெட்டு?”
   “பெரிய சிவன் கோயிலு இருக்கிற ஊருதாங்க”
   “ஏம்மா... ஊருக்கு ஊரு சிவன் கோயில் இருக்கு. போற ஊரு பேரைச் சொல்லு”
    “சேத்தியா தோப்ப தாண்டுனதும் இருக்கிற ஊருதாங்க”
    “ஏம்மா போற ஊர கேட்டா விடுகதை போட்ற; பெரிய வம்பா போச்சே”
    “சிதம்பரம் போறீங்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு இசைவாகத் தலை ஆட்டினார் அந்த அம்மா.
     டிக்கெட்டை எழுதி கொடுத்துவிட்டு நடத்துநர்  கேட்டார்: “வாய்ல கொழுக்கட்டையா வச்சிருக்க? சிதம்பரம்னு சொல்லலாமில்ல/”
      அந்த அம்மா சொன்னார்: “என்னோட வீட்டுக்காரர் பேர்தான் அது. நான் எப்படிங்க சொல்றது?”

     மனைவி தன் கணவர் பெயரைச் சொல்லக் கூடாது என்பது வழக்கமாக இருந்த காலம் அது. இன்றைய பெண்கள் இச்செய்தியை நம்ப மாட்டார்கள்.

    இக்காலத்துப் பெண்கள் தம் கணவரின் பெயரைச் சொல்லியே அழைக்கின்றனர். இப்படிப் பெயர் சொல்லி அழைப்பதில் தவறில்லை. ஆனால், பொதுவெளியிலும் தம் குழந்தைகளின் முன்னிலையிலும்   ரவி வா என்றோ, ரமேஷ் போடா என்றோ ஒருமையில் பேசுவதைத் தவிர்க்கலாம்.

   மேல் நாடுகளில் வயது வித்தியாசம் பாராமல் பெயர் சொல்லிதான் அழைக்கின்றனர். ஒரு நிறுவனத்தின் வாயிற்காப்பாளர் அந் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியை பெயர் சொல்லிதான் அழைக்கிறார். நம்மூரில் இப்படி அழைத்தால் அவரது வேலை போய்விடும்.

    இங்கு நாம் இன்னும்  மாறவில்லை. நான் முன்னர் முதல்வராகப் பணியாற்றிய பள்ளியில் அந்தப் பள்ளிக் கட்டடத்தைக் கட்டிய பொறியாளர் எனக்கு  அறிமுகமானார். அவருடைய மனைவியும் அங்கே ஆசிரியையாகப் பணியாற்றினார். அவர்களுடைய மகள் அங்கே படித்தாள். தொடக்கத்தில் எஞ்சினியர் சார் என அழைத்துப் பேசிய நான் ஒரு நாள்  “குருராஜன், வகுப்பறை மேற்கூரையில் வெடிப்பு இருக்கிறது கொஞ்சம் பாருங்கள்” என்றேன். உடனே கோபித்துக் கொண்டார். “இதுவரை என்னை யாரும் பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை” என்று வருத்தப்பட்டுக் கூறினார். எனது வேண்டுகோளைச் செவிசாய்க்காமல் சென்றுவிட்டார். என்னைவிட இருபது வயது இளையவர் அவர். அதற்குப் பிறகு என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டார்.

    பெயர்களைச் சொல்லிப் பழகாததால், நம்முடைய உறவினர்களின் பெயர்கள் தெரியாமலே போய்விடுகின்றன. எங்கள் ஊரில் உறவினர் ஒருவர் புளிமூட்டை என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார். அவருடைய பெயர் என்னவென்று இன்றுவரை எனக்குத் தெரியாது. வேறு ஒருவரை பூராசாமி என்றே அழைத்தார்கள். நெடுநாள் கழித்துத் தெரிந்தது அவர் பெயர் பூவராகசாமி என்று.

    இப்பொழுதும் பார்க்கிறோம். எஞ்சினியர் வீடு எது என்று கேட்டால் உடனே சொல்லிவிடுவார்கள். மா.கண்ணப்பன் வீடு எது எனக் கேட்டால் அவருடைய பக்கத்து வீட்டுக்காரருக்கே தெரியாது. அந்த எஞ்ஜினியர் பெயர்தான் கண்ணப்பன்!
     தமிழய்யா என்றுதான் மாணவர்களுக்குத் தெரியும். ஐந்தாண்டுகள் அவரிடம் படித்த மாணவர்களுக்குக் கூட அவருடைய பெயர் தெரியாது. அவருக்குத் தன் மாணவர்கள் தன்னைப் பெயர் சொல்லி அழைப்பது பிடிக்காது!

      இப்படிப் பெயரைக் குறிப்பிட்டு அழைக்கும் வழக்கம் பழங்காலத்திலும் இல்லை போலும். அதனால்தான் பல சங்கப் பாடல்களின் ஆசிரியர்கள் யார் எனத் தெரியவில்லை. கழைதின் யானையார், முடத்தாமக் கண்ணியார், தொடுத்தலை விழுத்தண்டு ஊன்றினார் என அவர்கள் படைத்த பாடல்களில் உள்ள ஒரு தொடரால் அழைக்கப்படுகிறார்கள்.
       சில நூல்களின் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. எடுத்துக் காட்டாக, பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த நீதி வெண்பா நூல் இன்றும் கிடைக்கும். ஆனால் அதன் ஆசிரியர் இன்னார் என்று அறிய முடியவில்லை.

    ஒருவருக்கு அவர் பேசும் மொழியில் மிகவும் இனிமை தரக்கூடிய ஒரு சொல் உண்டு என்றால் அது அவருடைய பெயர்தான். இதை நன்கு உணர்ந்த மேலை நாட்டினர் பிறருடைய பெயரை மிகவும் கவனமாக உச்சரிப்பார்கள். தவறாக உச்சரிக்க நேர்ந்தால் அதற்காக வருந்தி மன்னிப்புக் கேட்பார்கள்.

   அழகான பெயரெல்லாம் அலங்கோலமாகிப் போவதெல்லாம் இங்கேதான். கிருஷ்ணனை கிட்டான் கிச்சான் என அழைப்போம். பலரும் ஆங்கில எழுத்துகளால் மட்டும் அழைக்கப்படுகிறார்கள்; அறியப்படுகிறார்கள். ம.கோ. இரா என்பவரைத் தெரியுமா என்று கேட்டால் யோசிப்பீர்கள்.  M.G.R.அவர்களைத் தெரியுமா என்றால் உடனே தெரியுமே என்பீர்கள். ம.கோ.இராமச்சந்திரன் என்பவரும்  M.G.R.என்பவரும் ஒருவரே!

      சில மாமனிதர்களின் பெயர்களைத் தெருக்களுக்கும் நகர்களுக்கும் சூட்டுகிறோம். அவர்களுடைய பெயர்கள் காலப்போக்கில் யாருக்கும் தெரியாமல் போய்விடுகின்றன. எடுத்துக்காட்டாக, சென்னையில் தியாகராய நகர் தி.நகர் ஆகிவிட்டது. கோவையில் இரத்தினசபாபதி புரம் ஆர்.எஸ்.புரம் ஆகிவிட்டது. பெங்களூரில் புகழ்பெற்ற மகாத்மா காந்தி ரோடு எம்.ஜி.ரோடு ஆகிவிட்டது.

      பெயர் என்பதே சொல்லி அழைப்பதற்காகத்தான் என்பதை எண்ணிப் பார்ப்போம். பெயர்களைச் சிந்தாமல் சிதறாமல் சொல்லி அழைப்போம். நம்மைவிட வயதில் பெரியவர்களக இருந்தால் தகுந்த பின்னொட்டுகளைச் சேர்த்துக் கொள்வோம். திண்டுக்கல் தனபாலன் அவர்கள், பட்டாபிராமன் ஐயா, டேவிட் அண்ணா, கமலாக்கா, ரகு மாமா, பெருமாள் பெரியப்பா, லோகு சித்தப்பா, இலட்சுமி பாட்டி, இராதாமணி அம்மையார் எனக் குறிப்பிடலாமே. அல்லது பேராசிரியர் இரா.மோகன், முனைவர் இரா.இலட்சுமண சிங், திரு மோ.கதிர் என முன்னொட்டுகளைச் சேர்த்தும் குறிப்பிடலாம்.

     அழைப்பிதழ்களைக் கொடுக்கும்போது அழைப்பிதழில் பெயரை முன்னெழுத்துடன் முழுமையாக எழுதிக் கொடுப்பதை வழக்கமாகக் கொள்வோம். வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்களின் எண்ணைச் சொல்லாமல் பெயரைச்  சொல்லி வருகைப் பதிவு எடுக்க வேண்டும். ஆசிரியர்களும் ஒருவர்க்கொருவர் முழுப் பயர் சொல்லி அழைக்க வேண்டும். அப்படி சுருக்கமாக அழைப்பதாக இருந்தாலும் நா.பா., மு.வ. செ.கு.த. என்று அழைக்க வேண்டும்.

    திருமண மண்டபங்களில் வைக்கப்படும் பதாகைகளில்  O.P.S இல்லத் திருமணம் என எழுதாமல் ஓ.ப. சோமசுந்தரம் இல்லத் திருமணம் என்று முழுப்பெயரைத் தமிழில் எழுதி வைத்தல் நன்று.


    பெயர் சொல்லி அழைக்கும் புத்தியக்கம் தொடங்குவோம் வாரீர்.

3 comments:

  1. பெயர் சொல்லி அழைக்கும் புத்தியக்கம் தொடங்குவோம்
    தொடர்வோம் ஐயா

    ReplyDelete
  2. அழகாக அருமையாக சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
  3. என் மகனின் திருமணத்தின்போது பந்தல் அமைத்தவர், மின்னொளி ஏற்பாடு, மேடை அமைப்பு ஆகியோரிடம் சொன்ன ஒரே சொல் எங்கும் ஆங்கிலச் சொல் இருக்கக்கூடாது என்பதே. அனைவரும் அசந்துவிட்டனர். எவ்விடத்திலும் ஆங்கிலச்சொல் பயன்பாடே இல்லை.

    ReplyDelete