Monday 24 April 2017

முனைப்புடன் இயங்கும் முன்னோடி நூலகம்

    வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் ஒரே தினம். அது ஏப்ரல் 23. அந்த நாள் தான் உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

    தமிழ் நாட்டின் முன்னோடி நூலகமாகத் திகழும் கரூர் மாவட்ட மைய நூலகமும் அதன் வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய உலகப் புத்தக தினவிழா மிகச் சிறப்பாக நடந்தது. இது சிந்தனை முற்றத்தின் நாற்பத்து ஒன்றாவது பதிப்பாகும்.

  
விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.சூர்ய பிரகாஷ் தலைமையேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டிப் பேசினார். அழகு தமிழில் ஆற்றொழுக்காகப் பேசி அசத்தினார். ஞாயிற்றுக்கிழமையாக இருந்தும் விழா தொடக்கத்திலிருந்து முடியும் வரை சுமார் மூன்று மணி நேரம் மேடையில் அமர்ந்து ஆர்வமுடன் கண்டும் கேட்டும் இயங்கிய விதம் பாராட்டத் தக்கது. மற்ற அரசு அதிகாரிகளும் பின்பற்றத் தக்கது.

   
முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற மேனாள் சாகித்ய அகாதமி உறுப்பினர் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் அவருக்கே உரிய தனிப் பாணியில் ‘நூலின்றி அமையாது உலகு’ என்னும் தலைப்பையொட்டி பேசிய பேச்சு கேட்டாரைப் பிணிக்கும் தகையதாய் அமைந்தது. முன்னதாக ஐம்பது நூல்களை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

   
வளரும் பேச்சாளர் எழுத்தாளர் இளைஞர் முனைவர் நா.சங்கரராமன் அவர்களின் பேச்சு கோடையில் பெய்த குளிர் மழையாய் அமைந்தது. சுருங்கச் சொன்னால், மூவரின் உரைகளையும் விழாவிற்கு வந்திருந்தோர் அனைவரும் செவிநுகர் கனியென மாந்தி மகிழ்ந்தனர். அறிவார்ந்த வாசகர் திருக்கூட்டம் அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது.

    மாவட்ட நூலக அலுவலர் திரு மு.பழனிசாமி அவர்களின் வழிகாட்டுதலில் மைய நூலகர் திரு எஸ்.எஸ்.சிவக்குமார் அவர்களும், வாசகர் வட்டத் தலைவர் திரு.தீபம் உ.சங்கர் அவர்களும் மிகச்சிறப்பாக விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

   தனிமனித மேம்பாட்டுப் பயிற்சியாளர் திரு. ஆர்.முரளி அவர்கள் ஏராளமான இலக்கிய மேற்கோள்களை மணியிடை இழையென அமைத்து விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கிய விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சிறப்பு விருந்தினர்கள் அவரை மேடைக்கு அழைத்துப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டியது அவருடைய தனித்திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் எனலாம்.


     மொத்தத்தில் நடந்து முடிந்த விழா மாவட்ட மைய நூலகம் ஒரு முன்னோடி நூலகம் என்பதற்கு மீண்டும் கட்டியம் கூறுவதாய் அமைந்தது. 

3 comments:

  1. ஐயா, 23 ஏப்ரல் தான் உலக புத்தக நாள் என்றும், ஷேக்ஸ்பியர் பிறந்த மற்றும் இறந்த நாள் ஒன்றே எனத்தெரிய வைத்து, நூலின் பெருமையும், நூலகத்தின் பெருமையும் எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நூலின்றி அமையாது உலகு. நூலின்றி அமையாது அறிவு. நூலகங்கள் நுரையீரல் போல, நூலகங்கள் சுவாச உறுப்புகள் என எழுத்தாளர் சுந்தர ராமசாமி தனது ”ஜே.ஜே:சில குறிப்புகள்” நாவலில் குறிப்பிட்டுள்ளார். மனிதனின் கற்பனா வளத்தை அளவிட முடியாது. அது போல படைபாளனின் அறிவு ஆற்றலை அளவிடமுடியாது. படைப்பாளனின் அறிவை நாம் நுகரவேண்டும், எழுத்தைக் கண்கொண்டு இரசித்து உள்வாங்கவேண்டும். அவனது வாழ்வியல் நெறிகளை, கற்பனைத் திறத்தை மனத்திரையில் நிறுத்தி கதாபாத்திரங்களை உலவ விடவேண்டும். அப்போழுது தான் படைப்பாளனின் கருத்தை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். அதற்குப் புத்தகங்கள் தான் துணை நிற்க்கும். நூல்கள் அறிவுக் களஞ்சியங்கள், சிந்தனை ஊற்றுக்கள், நுகர நுகர இனிமை தரக்கூடிய அமுதம் போன்றது. அனைவரும் நூல்களைப் படிக்க வேண்டும். கருத்துக்களைப் பகிர வேண்டும். நன்றி.
    பேராசிரியர் ரா.லட்சுமணசிங்

    ReplyDelete