Thursday 10 August 2017

சிறுகதை

கன்னத்தில்  முத்தமிட்டால்
முனைவர்.அ.கோவிந்தராஜூ

   ஒட்டாவா சிவிக் ஹாஸ்பிட்டல் என்பது கனடா நாட்டில் ஆன்டாரியோ மாநிலத்தின் அரசு தலைமை மருத்துவ மனையாகும். ஓர் ஐந்து நட்சத்திர ஓட்டல் போன்று உள்ளது. ப வடிவில் அமைந்துள்ள பத்துமாடிக் கட்டடம். எண்  417 நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு முன்னால் நூறு கார்களை நிறுத்த முடியும். அதிகாலை நேரம் என்பதால் ஏழெட்டுக் கார்களே நிற்கின்றன.

    மருத்துவமனையின் முன்னால் பரந்து விரிந்து கிடக்கும் அரசு ஆராய்ச்சிப் பண்ணையில் அதிகாலை நேரத்தில் எனது நடைப்பயிற்சி தொடங்கிவிடும்.

   அந்த விடியற்காலையில் ஒரு வெள்ளை  நிற 911 ஆம்புலன்ஸ் அவசர கதியில் வந்து மருத்துவமனை வாயிலில் நிற்கிறது. கூடவே ஒரு போலீஸ் வாகனமும் வந்து நிற்கிறது.  ஆம்புலன்சின் பின்பக்கக் கதவுகள் நொடியில் திறக்கின்றன. முப்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் படுத்திருக்கிறாள். அவளுடைய முகத்தில் வென்ட்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அது ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரில் இணைக்கப்ப்பட்டுள்ளது.

   உதவியாளர்கள் ஓடிவந்து ஆக்ஸிஜன் குடுவையுடன் கூடிய ஒரு ஸ்ட்ரெச்சரில் அந்தப் பெண்ணைப் படுக்க வைக்கிறார்கள். அங்கு வந்த மருத்துவர் அந்தப் பெண்ணின் வலது கண்ணை மெல்லத் திறந்து பார்க்கிறார். அருகில் நின்ற செவிலியிடம் ஃபிரெஞ்ச் மொழியில் ஏதோ சொல்ல அவள் ஸ்ட்ரெச்சரின் பின்னால் ஓடியபடி, தன் கைப்பேசியை உயிர்ப்பித்துச் சில குறிப்புரைகளைத் தந்துகொண்டே இருந்தாள்.

    வந்த போலீசார் ஒரு கைப்பேசியை நீட்ட, அம் மருத்துவர் ஒரு கணம் பார்த்துவிட்டுத் தன் வலது கட்டைவிரல் ரேகையை  அதன்மீது அழுத்தமாக வைக்கிறார். அவர்கள் நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுகின்றனர்.

   அவள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறாள்.

அவளுடைய கணவன் ஊரில் இல்லை. சற்று நேரத்தில் அங்கே வந்த உறவினர் சிலர் உள்ளே சென்ற டாக்டரின் வருகைக்காக வெளியில் காத்திருக்கின்றனர்.

  அவள் ஒரு பழங்குடி இனப்பெண். ஒட்டாவா ஆற்றின் அக்கரையில் உள்ள க்யூபெக் பகுதியில் இயற்கை விவசாயம் செய்து ஆற்றின் இக்கரையில் உள்ள  பைவார்ட் மார்க்கெட்  உழவர் சந்தையில் தினமும் காய்கறி பழங்கள் விற்பவள். அதிகாலையில் கடைவிரிக்கும்போது மயங்கி விழுந்தவளைத்தான் அருகிலிருந்தோர் ஆம்புலன்ஸை வரவழைத்து அனுப்பியிருந்தனர்.

   உறவினர்கள் தமக்குள் பேசிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் அது ஆங்கிலமும் இல்லை. ஃபிரெஞ்ச்சும் இல்லை. எதிரில் இருந்த கதவு இரண்டாகப் பிரிந்து விலகியது. மருத்துவர் வெளியே வந்து  ஏதோ சொல்கிறார். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. செவிலியைப் பார்க்கிறார். அவள் பழங்குடியினரின் மொழியில் மொழிபெயர்த்துச் சொன்னதும் அங்கு கூடியிருந்த பெண்கள் கதறி அழுகிறார்கள்; ஆண்கள் சிலையாகிச் சுவரில் சாய்ந்து சரிந்து குத்துக்காலிட்டு உட்கார்ந்து கைகளைத் தம் தலைமீது வைத்துக் கொள்கிறார்கள்.

     தீவிர நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் எந்த நேரத்திலும் அவள் சாக நேரலாம் என்பதுதான் மருத்துவர் சொன்ன கெட்ட செய்தி. டொரன்டோவிலிருந்து ஒரு சிறப்பு மருத்துவ வல்லுநர் வந்து கொண்டிருக்கிறார் என்பது அவர் கூடுதலாகத் தந்த நல்ல செய்தி.

    விமானம் மூலம் விரைந்து வந்த மருத்துவரை வாயிலில் வரவேற்று அழைத்துச் செல்கிறார்கள். வழங்கப்பட்ட சிகிச்சை விவரம் முன்கூட்டியே அவர் மின்னஞ்சல் மூலம் அறிந்திருந்ததால் அவர் தனது சிறப்புச் சிகிச்சையைத் தாமதமின்றித் தொடங்கிவிட்டார்.

    இயக்குநரின்  அறைக்குச் சென்று தேநீர் அருந்திவிட்டு மீண்டும் சென்று பார்க்கிறார். அவருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. செவிலியர் அளித்த குருதி ஆய்வறிக்கையில் நோய்த் தொற்று குறைந்ததற்கான குறிப்பு ஏதுமில்லை. “ஓ மை காட்” என வாய்விட்டுச் சொன்னார்.

  தன் கைப்பேசியை உசுப்பினார்; பேசினார். அவர் முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளி வீசியது. அவருடைய வேண்டுகோளை ஏற்று   வேன்கூவர் நகரிலிருந்து ஒரு மூத்த சிறப்பு மருத்துவர் அடுத்த விமானத்தில் வந்து சேர்ந்தார். மாலை ஆறு  மணிவரை தீவிர சிகிச்சை அளித்தார். எட்டு மணி வாக்கில் நோயாளியின் குருதியை எடுத்து ஆராய்ந்தபோது நோய்த்தொற்று நீங்கியிருந்தது. ஆனால் நோயாளி எதிர்பாராத வகையில் கோமா நிலைக்குப் போய்விட்டதை அறிந்து டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

   சோதித்துப் பார்த்த டாக்டர்கள் மூளைச் சாவுக்கான அறிகுறி தொடங்கிவிட்டதை அறிந்ததும் காத்திருந்த உறவினரிடம் சென்று கைவிரித்தார்கள். கண் கலங்கி நின்ற அவளுடைய கணவன் மயங்கி விழுந்தான்; முதலுதவிக்குப்பின் கண் திறந்தான்; கதறினான்.

   மீண்டும் கடைசி கடைசியாக மருத்துவர்கள் அவளைப் பரிசோதித்து மூளைச்சாவு ஏற்பட்டதை உறுதி செய்தனர். வென்ட்டிலேட்டரை அகற்றினால் மூச்சு அடங்கிவிடும் என்று அவளது கட்டிலில் தொங்கிய  மருத்துவ அறிக்கை ஏட்டில் எழுதிக் கையொப்பமிட்டனர்.

  என் மனைவி அழகம்மையைத் தொலைப்பேசியில் அழைத்து விவரம் கூறினேன். அவள் அடுத்த அரை மணி நேரத்தில் பதினெட்டு மாத குழந்தையை ஒரு பேபி ஸ்ட்ராலரில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தாள்.

    “காலையிலிருந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடித் தோற்றுவிட்டார்கள். இப்போது வென்ட்டிலேட்டரை அகற்றப் போகிறார்கள். குழந்தையை அவள் அருகில் அழைத்துச் செல்; கடைசி கடைசியாக கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்கட்டும்” என்று நான் சொன்னதும் அழகம்மை குழந்தையை அள்ளி எடுத்து அப் பெண்ணின் முகத்தருகில் விட்டாள்

   ஒரு செவிலி மெல்ல வென்ட்டிலேட்டரை அகற்றினாள். அணையப்போகும் தீபம் கடைசியில் பிரகாசமாக எரியுமாம். அப்படித்தான் அவளுடைய முகமும் பிரகாசமாக இருந்தது.

   ‘யம்மைரே’ ‘யம்மரே’ என மழலை மொழியில் சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டது அந்தக் குழந்தை.


 அவ்வளவு எளிதில் உணர்ச்சி வசப்படாத டாக்டர்களே கண் கலங்கினர்.

  அடுத்த நொடியில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. முரூச்சி....முரூச்சி... என அவளுடைய வாய் முணகியது; கண்கள் மெல்லத் திறந்தன; கைகளும் கால்களும் அசைந்தன.

    தூக்கம் கலைந்து எழுவதுபோல் எழுந்து உட்கார்ந்துகொண்டு குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள். அவளுடைய கணவன் மீண்டும் மயங்கி விழுந்தான் ஆனால் இப்போது இன்ப அதிர்ச்சியில்.

   பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் அவளுக்குப் பிறந்த  மூன்றாவது குழந்தை அது. குழந்தைப்பேறு  வாய்க்காத நாங்கள் சென்ற மாதம்தான் அவளிடமிருந்து முறையாக அக் குழந்தையைத் தத்தெடுத்து வந்தோம்.

   “அம்மாவின் உயிரை மீட்ட அந்தக் குழந்தை இனி அவளிடம் இருப்பதுதான் சரியாக இருக்கும்; அவளுடைய நோய்க்கு மருந்தாகவும் இருக்கும். இனி நாம் அந்தக் குழந்தைக்கு வளர்ப்புப் பெற்றோராக  இருப்போம்” என்று நான் என் மனைவி அழகம்மையிடம் சொல்ல அவளும் உடனே ஒத்துக்கொண்டாள்.

  “ஒரு குழந்தையின் முத்தம் ஓர் உயிரை மீட்டது; இது கனடா நாட்டின் மருத்துவ வரலாற்றில் இதுவரை அறியப்படாத அதிசயம்” என்று அந்த மருத்துவமனையின் இயக்குநர் என்ற முறையில் என் கைப்பட மருத்துவமனை நிகழ் பதிவேட்டில்  எழுதி கையொப்பம் இட்டேன்.

   செவிலி ஒருத்தி ஓடிவந்து முன்னால் நின்றாள். “இப்போது அந்தப் பெண் நன்றாகப் பேசுகிறாள். சிறிது பால்கூட பருகினாள்” என்றாள்.

  “எதற்கும் நாளை மதியம்வரைக்கும் நம் கண்காணிப்பில் இருக்கட்டும்; மாலையில் டிஸ்சார்ஜ் செய்துவிடலாம்” என்றார் உதவி மருத்துவர்.

 நானும் என் மனைவியும் மருத்துவமனைக் குடியிருப்பில் இருந்த எங்கள் இல்லத்தை நோக்கி நடந்தோம்.

ஆம். வெற்று ஸ்ட்ராலரைத் தள்ளிக்கொண்டு.
.......................................................*****.................................................................................

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து

8 comments:

  1. ஐயா அருமை!! அருமை!! சமீபத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் தன் அன்னைக்கு அவள் குழந்தை தந்த கடைசி முத்தம், அத்தாய் இயற்கை எய்தினார் என்று வாட்சப்பில் ஒரு படம் வெளியாகியது!! அதன் அடிப்படையில் நீங்கள் கதையை எழுதி நேர்மறையாக முடித்திருக்கிறீர்க்ளோ ஐயா?!!!

    அல்லது நீங்கள் இப்போது அங்கு இருப்பதால் நடந்த உண்மைசம்பவத்தின் அடிப்படையில் ஆன கதையோ!!?? எப்படி இருந்தாலும் அருமை ஐயா..கொண்டு சென்ற விதம் இப்படித்தான் நடக்கப் போகிறது என்று ஏதோ மனதில் சொன்னாலும் அப்படியே நீங்கள் முடித்தவிதம் அருமை. மிகவும் ரசித்தோம்..

    துளசி, கீதா

    ReplyDelete
  2. கதை என்றால் ஓகே . நன்றாக இருக்கிறது .
    நிஜம் என்றால் அதில் உள்ளவர்கள் அனைவருமே ஏகப்பட்ட அட்ஜெஸ்ட் மெண்டுகள் அவசியம் என்று ஆகிவிடும்
    இனியெல்லாம் சுபமே

    ReplyDelete
  3. மருத்துவத்தில் முடியாததை மனித நேயம் வென்றது.அருமை ஐயா.

    ReplyDelete
  4. மருத்துவத்தில் முடியாததை மனித நேயம் வென்றது.அருமை ஐயா.

    ReplyDelete
  5. Sir.. Its simply wonderful!!

    ReplyDelete
  6. அன்பினால் ஆகாததும் உண்டோ
    அருமை ஐயா

    ReplyDelete
  7. விஜய் தொலைக்காட்சி BIG BOSS நிகழ்ச்சியில் மருத்துவ முத்தம் குறித்து ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறத்து கேலிக்கூத்தாக
    நீங்கள் குறிப்பிட்டுள்ள மருத்துவ முத்தம்
    உண்மையிலேயே கதையோ உண்மையோ
    அருமை ஐயா

    ReplyDelete