Saturday 12 August 2017

இதுவல்லவா அதிசயம்!

    உலகில் ஏழு அதிசயங்கள் மட்டும் உள்ளன என்பதை நான் ஒத்துக் கொள்வதில்லை. முதலில் இப்படி வகைப்படுத்துவதையே தவறு என்கிறேன். ஒருவர் அதிசயம் எனச் சொல்வதை இன்னொருவர் சாதாரணம் என்பார்;  மற்றொருவர் சாதாரணம் என்பதை வேறொருவர் உலக மகா அதிசயம் என்பார்.

   “அழகு என்பது பார்க்கும் பொருளில் இல்லை; பார்ப்பவரின் பார்வையில்தான் உள்ளது” என்பார் டாக்டர் மு.வ. அவர்கள். உண்மைதான். காதலிக்கும்போது ஸ்ரீதேவி என்று பாராட்டியவன் அவளைத் திருமணம் செய்துகொண்ட அறுபத்தோராம் நாளில் மூதேவி என்று திட்டுகிறானே! அது என்ன அறுபத்து ஒரு நாள் கணக்கு? மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்று சொல்லி வைத்தார்களே அந்தக் கணக்குதான்.

    அது போகட்டும். இங்கே கனடாவில் தினம் தினம் ஏதாவது ஓர் அதிசயத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். உங்களுக்கு அது சாதாரணமாகத் தெரிந்தால் கம்பெனி பொறுப்பேற்காது.

    இங்கே சைக்கிள் ஓட்டுவோர் அனைவரும் ஹெல்மெட் அணிகிறார்கள்! ஐந்து வயது குழந்தை கூட ஹெல்மெட் அணிந்துதான் சைக்கிள் ஓட்டுகிறது! ஒரு நாள் ஒரு நாற்சந்தியில் நான்கு மணி நேரம் உடகார்ந்து பார்த்தேன்.(வசதியான இருக்கைகள் உண்டு) ஹெல்மெட் அணியாத ஒரு சைக்கிள் ஓட்டி ஒரு பைக் ஓட்டி கூட என் கண்ணில் படவில்லை.ஹெல்மெட் அணிவது நரக வேதனை என நினைக்கும் மக்கள் வாழும் நாட்டிலிருந்து வந்த எனக்கு இது அதிசயம்தான்.

    நம் ஊர் நகரப் பேருந்துகளில் சைக்கிளை எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் இங்கே பேருந்துகளில் சைக்கிளை அதுவும் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்பது அதிசயம்!

  
    இந் நாட்டில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் வழக்கம் அறவே இல்லை. இங்கே இளைஞர்கள் குடிக்கிறார்கள். ஆனால் குடித்துவிட்டு ஒருபோதும் வாகனம் ஓட்டுவதில்லை. இரவு நேரத்தில் குடியும் கும்மாளமும் முடிந்து கேளிக்கை விடுதியைவிட்டு நள்ளிரவில் காரில் வீடு திரும்புகிறார்கள். இன்றைக்கு வசமாக மாட்டினான் என்று கனடா போலீஸ் காரை நிறுத்திச் சோதனை செய்தால் காரை ஓட்டிய இளைஞன் குடிக்கவே இல்லை என்பது உறுதியாகிறது! மற்றவர் எல்லாம் காரினுள் மிதக்கின்றார்கள்! தம்முள் முறை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒருவர் என ஒரு துளியளவு கூட மது அருந்தாமல் வாகனம் ஓட்டும் அதிசயத்தை இங்குதான் பார்க்கிறேன்.

    ஆண்களும் பெண்களும் பொது இடங்களில் திறந்த மேனியாகத்  திரிகிறார்கள். ஆனால் அது எனக்கு அதிசயமாகப் படவில்லை; அது அவர்கள் கலாச்சாரம். அதே சமயம் அவர்கள் உடற்பருமன், ஊளைச் சதை, தொந்தி, தொப்பை என எதுவும் இல்லாமல் அழகாக இருப்பதுதான் அதிசயமாக உள்ளது.

     நம் ஊரில் பெண்கள் பேருந்து ஓட்டுநர்களாய் இருப்பதில்லை. இங்கே ஆண்களைவிட பெண்களே அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குகிறார்கள். நடத்துநர் இல்லாத பேருந்துகளை நள்ளிரவிலும் ஒய்யாரமாக ஓட்டும் ஒட்டாவா பெண்களும் எனக்கு அதிசயமே!

      சாலை ஓரங்களில், பூங்காக்களில், வீட்டு முகப்புகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. வண்ண ரோஜா மலர்கள் காடாக மலர்ந்திருப்பதைக் காண  கண் கோடி வேண்டும். துலுக்கு மல்லிப் பூக்கள் பாய் விரித்ததுபோல் மண்டிக் கிடக்கின்றன. பூக்களைப் பறிக்காதீர்கள் என்று எழுதிவைக்கவும் இல்லை. இருந்தும் ஒரு பூவைக்கூட யாரும் பறிப்பதில்லை என்பதும் அதிசயந்தான்!


    பாலித்தீன் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு இங்கே மிக மிக அதிகம். பத்து விதமான காய்களை வாங்கினால் பத்துப் பைகளில் போட்டுத் தருகிறார்கள். தயிர் உட்பட எல்லாமே பிளாஸ்டிக் டப்பாக்களில்தான் விற்கப்படுகின்றன. காபி கூட பிளாஸ்டிக் கேன்களில்தான் கிடைக்கின்றன. என்றாலும் ஏரி, பூங்கா, திரையரங்கம், பள்ளி, பல்கலைக்கழகங்கள், சுற்றுலா மையம் போன்ற பொது இடங்களில் ஒரு பாலித்தீன் பையைக்கூட காண வாய்ப்பில்லை என்பது உண்மையில் அதிசயம்தான்!

   இந்தியாவின் நகரங்களில் சுற்றுச்சுவர் இல்லாத வீடுகளைப் பார்க்க முடியாது. சுற்றுச் சுவரும் அதில் காணப்படும் பெரிய இரும்புக் கதவுகளும் பிரமிப்பை ஏற்படுத்தும். அதற்காக இலட்சக் கணக்கில் செலவிடுவர். ஆனால் கனடாவில் வீடுகளுக்குச் சுற்றுச்சுவர் கட்டும் வழக்கமில்லை என்பதையும் நான் ஓர் அதிசயம் என்றே நினைக்கிறேன்.


   இவ்வூர் மால்களில்  கிரிக்கெட் மட்டை விற்கப்படுவதில்லை. கனடா நாட்டின் “மைனாரிட்டி கேம்” என்று முத்திரை குத்தி ஓரங்கட்டிவிட்டார்கள். என்ன காரணமோ தெரியவில்லை. ஊருக்கு ஊர் பெரிய விளையாட்டுத் திடல்கள் இருக்கின்றன. அங்கே மாலை நேரத்தில் இளைஞர்கள் கூடிக் கூடி விளையாடுகிறார்கள். கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், சாக்கர் மற்றும் இறகுப்பந்து விளையாட்டுகளை விரும்பி விளையாடுகின்றனர். ஆனால் யாரும் கிரிக்கெட் மட்டையைத் தொடுவதில்லை என்பது அதிசயம்.  
   
    நிறைவாக, இவர்களுடைய அகராதியில் நமக்கெல்லாம் நன்கு பழக்கப்பட்ட ஒரு சொல்லைத் தேடித் தேடிப் பார்க்கிறேன்; கிடைக்கவே இல்லை. கையூட்டு(bribe) என்னும் சொல்தான் அது. இதுதான் மிகப்பெரிய அதிசயம்.

    அடுத்தடுத்தப் பதிவில் இன்னொரு பேரதிசயமும் அதன் விளக்கமும் இடம்பெறும்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

    

9 comments:

  1. அதிசயங்கள்தான் ஐயா
    வியப்பாக இருக்கின்றது

    ReplyDelete
  2. ஐயா நீங்கள் எழுதியது அனைத்து அதிசயம் தான். அந்நாடு இவ்வளவு வளர்ச்சி மற்றும் ஒழுங்குடன் வாழ அவர்கள் நமது பழைய பண்பாட்டைப் பின்பற்றுவதே. என்று ஒரு நாடு பண்பாட்டை இழக்கிறதோ அங்கே ஒழுக்கம் கெட்டுப்போகும். பணம் என்னும் பேய் எப்போழுது நம்மைப் பிடித்ததோ அப்பேதே நாம் நம் சுயத்தை இழந்தோம். பணத்துக்காக ஓடுவதால் உடலை மறந்து விடுகிறோம். ஆதலால் உடல் மற்றும் மனத் துன்பங்களை அனுபவக்கிறோம் என்பதை உங்கள் கட்டுரை விளக்குகிறது. இன்னும் பல தகவல்களை எதிர்நோக்கும் உங்கள் மாணவன்.

    ReplyDelete
  3. இக்கட்டுரையை படித்த எங்களுக்கும் அதிசயமாகத்தான் இருக்கிறது!

    ReplyDelete
  4. இக்கட்டுரையை படித்த எங்களுக்கும் அதிசயமாகத்தான் இருக்கிறது!

    ReplyDelete
  5. பூக்களைப் பறிக்காதீர்கள் என்று எழுதிவைக்கவும் இல்லை. இருந்தும் ஒரு பூவைக்கூட யாரும் பறிப்பதில்லை என்பதும் அதிசயந்தான்!// ஆம் ஐயா அங்கெல்லாம் யாரும் பூக்களைப் பறிப்பதில்லை. அது போல அமெரிக்காவிலும், பொதுவாகவே வெளிநாடுகளில் யாரும் யார் வீட்டுப் பூக்களோ அல்லது பொதுஇடங்களில் உள்ள பூக்களையோ பறிப்பதில்லை. நம்மூரில் தான் அதைத் தொடாதே பறிக்காதீர்கள் என்ற அறிவுப்புகள் வைத்தாலும் மக்கள் அதையும் மீறித் தொடுகிறார்களே!! இதெல்லாம் பிறந்ததிலிருந்தே வர வேண்டிய பழக்கம். பெற்றோர், கூட இருப்பவர்கள் என்ன செய்கிறார்களோ அதைத்தானே குழந்தைகள் செய்யும்...

    உங்களின் முதல் பத்தி // ஆம் ஐயா எங்கள் கருத்தும் அதுவே..அழகு என்பது பார்ப்பவர்களின் பார்வையில் தான் இருக்கிறது...

    துளசி, கீதா

    ReplyDelete
  6. You can publish your experience in the form of a book. I wonder if you went there with a view to collecting material for writing a book. However, whatever you write, Doctor, is quite interesting and surprising. Prof.Pandiaraj

    ReplyDelete
  7. அண்ணா! நீங்கள் சமூகத்தை பார்க்கும் பார்வையில் தெரிகிறது அதன் மீது உள்ள அக்கறை. கனடாவில் கண்ட நல்ல செயல்பாடுகளை அக்கறையோடு விளக்குகிறீர்கள் என்றால் ஏதோ இவை எதையுமே இதற்கு முன் என்று பொருள் இல்லை.
    "என் தேசம்... என் மக்கள்... என்றைக்கு இந்நிலை பெருவார்கள்" என்கிற சமூக அக்கறை.

    ReplyDelete
  8. பிற நாடுகளில் காணும் நல்லவற்றை நம் மக்களுக்குத் தெரிவிப்பதில் தாங்கள் பேரின்பம் காண்பவர் என்பது பாராட்டிற்குரியது. ஆனால் நம் மக்கள் அவற்றைப் படித்து மறந்துவிட்டால் என்ன செய்வது? இறுதியாகச் சொன்ன செய்தி அங்கு வியப்பில்லை- இங்கு நடந்தால் வியப்பே! - நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  9. எனக்கு மிகவும் பிடித்த அதிசயம் " நிறைவாக, இவர்களுடைய அகராதியில் நமக்கெல்லாம் நன்கு பழக்கப்பட்ட ஒரு சொல்லைத் தேடித் தேடிப் பார்க்கிறேன்; கிடைக்கவே இல்லை. கையூட்டு(bribe) என்னும் சொல்தான் அது. இதுதான் மிகப்பெரிய அதிசயம்."

    ReplyDelete