Thursday 17 August 2017

செய் அல்லது செத்துமடி

     மரங்களைத் துதித்தவர்கள் நம் முன்னோர். பதச் சோறாக, கோவில்களில்  தல விருட்சம் என்னும் பெயரில் ஒரு மரத்தை  வளர்த்து வழிபடுவதைக் .குறிப்பிடலாம். சிறு தெய்வங்களான ஐயனார், கருப்பசாமி, வீரனார், பத்ரகாளி சிலைகள் யாவும் மரங்கள் சூழ்ந்த இடங்களில்தாம் இருக்கும். இவை கோவில் வனம் என அழைக்கப்படும்.

   எடுத்துக் காட்டாக, கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் அருகில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ள வன பத்ரகாளியம்மன் கோவில் குறிப்பிடத் தகுந்ததாகும்.  ஊர்தோறும் அரசமரத்தையும் வேப்பமரத்தையும் ஒன்றாக நட்டு வழிபாடு செய்தார்கள். அரச மரத்தடியில் அருள் தந்தபடி உட்கார்ந்திருப்பது பிள்ளையாருக்கு மிகவும் பிடிக்கும்.

    புத்தர் ஞானோதயம் பெற்றதே போதி மரத்து நிழலில்தான். மரங்கள் கூட குல தெய்வங்களாகக் கும்பிடப்படும் என்பதை வைரமுத்து அவர்கள் தன் மூன்றாம் உலகப்போர் என்னும் நாவலில் காட்சிப்படுத்துகிறார். "பார்க்கும் மரங்களில் எல்லாம் உந்தன் பச்சை நிறம் தோன்றுதே நந்தலாலா" என்று பாரதியார் கண்ணனைப் பாடுகின்றார். இவை எல்லாமே மரங்களைப் பேணும் உத்திகள்தாம். மரங்கள் இல்லாவிட்டால் மண்ணில் மனிதன் வாழ முடியாது என ஆய்ந்து உணர்ந்து இந்த உத்திகளை வகுத்த நம் முன்னோர்  பகுத்தறிவாளர்களா? மரங்களைக் கும்பிடுவது மடமை, அரசமரத்தைச் சுற்றுவது அறிவீனம் என்று வாதம் செய்து மரங்களை வதம் செய்த நாம் பகுத்தறிவாளர்களா?

    இங்கே கனடாவில்  ஒட்டாவா ஆற்றங்கரையில் ஓய்வாக ஒரு மேப்பிள் மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு இப்படியெல்லாம் யோசித்துப் பார்த்தேன்.

   இங்கே ஆன்மிக அடிப்படையில் மரங்களை யாரும் பார்ப்பதில்லை; அறிவியல் அடிப்படையில் மரங்களைப் பார்க்கிறார்கள். மதிக்கிறார்கள். மரங்கள் உயிர் வளியை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்னும் அறிவியல் உண்மையை அறிந்துள்ளார்கள். மரங்கள் எல்லாம் பெய்யும் மழையை மண்ணில் தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயரச் செய்யும் என்னும் அறிவியல் உண்மையும் இவர்களுக்குத் தெரிந்துள்ளது. அதனால்தான் உலகிலேயே அதிக மரங்களுக்குச் சொந்தக்காரர்களாகத் திகழ்கிறார்கள்.

    ஆனால் நம்மிடத்தில் இன்று ஆன்மிகமும் இல்லை; அறிவியலும் இல்லை. பொன்முட்டை இடும் வாத்தை அறுத்துப் பார்க்கும் முட்டாள்தனம்தான் உள்ளது.

    
கனடா நாட்டில் பிள்ளைகளை வளர்ப்பதுபோல் மரங்களை வளர்க்கிறார்கள். வருடத்தில் ஜூன் தொடங்கி நான்கு மாதங்கள் மட்டுமே மரம் நட ஏற்றப் பருவமாகும். எஞசியுள்ள எட்டு மாதங்களிலும் கடுமையான பனிப்பொழிவு இருக்கும். இந்த எட்டுமாதக் குளிரைத் தாக்குப் பிடிக்கும் வகையில் பத்தடி உயரம் வளர்ந்த மரக் கன்றுகளை நடுகிறார்கள். பூச்சிகளை அண்டவிடாத வேதிப்பொருளில் நனைத்த சாக்குத் துணியால் கன்றின் அடித்தண்டைச் சுற்றிக் கட்டி நடுகிறார்கள். பனி மழையில் வேர்கள் பாதிக்கப்படாமல் இருக்க செடியைச் சுற்றி மரத்தூளைக் குவித்து வைக்கிறார்கள்.
அந்த மரத்தின் கிளையில் மரத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் நாடாவைக் கட்டி விடுகிறார்கள். காற்றில் ஆடாமல் இருப்பதற்காக இருபக்கமும் இரும்புக் குழாய்களை நட்டு மரத்திற்கு வலிக்காமல் சற்றுத் தளர்வாக உறுதியான நாடாவால் கட்டுகிறார்கள். முறையாக நீர் ஊற்றுகிறார்கள். இங்கு நடப்படும் செடிகளுக்கு யாரும் கூண்டு கட்டுவதில்லை. ஆடு மாடு கடிக்காது. காரணம் ஆடு மாடுகளே இல்லை. அவையெல்லாம் ஊரைவிட்டுத் தள்ளி வேலியிடப்பட்ட வளாகத்தினுள் வளர்க்கப்படுகின்றன.

   மரங்கள் நட்டதற்கானப் பதிவேடுகளையும் பராமரிக்கிறார்கள். காரணமில்லாமல் உயிருள்ள மரத்தைக் கடவுளே வந்தாலும் வெட்டமுடியாது. பதிவேட்டில் உரிய காரணத்தைப் பதிந்துவிட்டுதான் வீட்டிற்கு அருகில் அல்லது பூங்காவில் உள்ள மரங்களை அகற்றமுடியும். ஒரு மரத்தை அகற்றினால் உடனே ஒன்பது மரக்கன்றுகளை நடும் பழக்கம் இவர்களிடத்தில் உள்ளது.

  
Tree plantation is in progress
இங்கே ஆண்டுக்கு ஒருமுறை விஷ வண்டுகள் தாக்கி பெரிய மரங்கள் கூட பட்டுப் போவதுண்டு. அதனால் மரங்களுக்கு இடையில் செடிகளை நட்ட வண்ணம் உள்ளார்கள். இங்கே காடுகளில் பட்டுப்போய் காற்றில் தாமாக சாயும் மரங்களைக்கூட அரசே நினைத்தாலும் அகற்றமுடியாது. சட்டம் அப்படி. நேஷனல் கேப்பிட்டல் கமிஷன் எனப்படும் தன்னாட்சி அமைப்பு நாட்டிலுள்ள ஆறுகள், ஏரிகள், காடுகள் அனைத்தையும் கண் கொத்திப் பாம்பாக இருந்து பாதுகாக்கிறது. நம் ஊரில் வனக் காவலர்களே வனங்களில் செழித்து வளர்ந்து நிற்கும் மரங்களை வெட்டி விற்றுவிடுகிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.

   
இந்த ஊரில் வீட்டைச் சுற்றி மரங்கள் இல்லாவிட்டால் அந்த வீடு மிகக் குறைவான வாடகைக்குதான் போகும். வீட்டிற்கு மிக அருகில் மரம் வளர்ப்பதால் அதன் வேர்களால் கட்டடத்திற்குப் பாதிப்பு உண்டாகுமே என்று சொன்னால் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். காலையில் எழுந்ததும் மரங்களின் முன் கண்விழிக்க வேண்டும் என்னும் மனப்பாங்கு உடையவர்களாக இந்நாட்டு மக்கள் இருக்கிறார்கள்.

  இன்னொரு செய்தி. இந் நாட்டிற்கே உரிய பாரம்பரிய மரங்களை மிகுதியாக வளர்க்கிறார்கள். நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆண்டதால் அவர்களால் வெளிநாட்டு மரங்கள் நிறைய அறிமுகப்படுத்தப்பட்டன.  சென்ற ஆண்டில் வந்த சென்னை வர்தா புயலின்போது தென்னை,பனை, மா, புங்கன் போன்ற பாரம்பரிய மரங்கள் தாக்குப்பிடித்துத் தப்பிவிட்டன. ஆனால் வெளிநாட்டு மரங்களான ரெய்ன் ட்ரீ என்னும் தூங்குவாகை, டிலானிக்ஸ் ரீஜியா என்னும் காட்டுத் தீ மரம் போன்றவை வேரோடு சாய்ந்துவிட்டன.

    சில பாரம்பரிய மரங்களின் பெயர்களைச் சொன்னால் இளைய தலைமுறைக்கு எதுவும் தெரிவதில்லை. நல்ல வேளையாக, நல்ல வேலையாக ஈஷா மையம் ஒன்றைச் செய்கிறது. மாவட்டம்  தோறும் மரக்கன்றுப் பண்ணைகளை அமைத்து விளாம், வில்வம், வேங்கை, மகிழம், புன்னை, இலுப்பை, அத்தி, கொடுக்காப்புளி போன்ற பாரம்பரிய மரக்கன்றுகளை வெறும் ஏழு ரூபாய்க்குத் தருகிறார்கள். அவர்கள் கடை விரித்தும் கொள்வாரில்லை என்பதுதான் வேதனை தரும் செய்தி.

   நம் பூட்டன் காலத்தில் இருந்த ஒரு மரம் இன்று இல்லாமல் ஒழிந்துவிட்டது என்பது நமக்கு இழிவு அல்லவா? இனியாவது இளைஞர்கள் விழித்தெழ வேண்டும். பாரம்பரிய மரம் வளர்ப்புச் சங்கங்களை(Heritage Tree Club) உருவாக்கி ஆக்கப் பணிகளை ஆற்ற வேண்டும்.

    கனடா நாட்டு அரசும் மக்களும் இணைந்து மரங்களைப் பேணும் அழகே அழகு. ஒவ்வொரு மரமும் செழித்து வளர்ந்து மணப்பெண் போலக் காட்சியளிக்கிறது. சாலையோர மரங்களின் கிளைகள் சாலைகளை ஆக்கிரமிக்கும்போது சாலை ஒழுங்கிற்குக் கிளைகள் மின் இரம்பத்தால் வலி தெரியாமல் அறுத்து அகற்றப்படுகின்றன. அகற்றிய கிளைகள், கொம்புகளை ஒரு இயந்திரம் பொடியாக்கி மரத்தடியிலேயே  துப்பிவிடுகிறது;அது மக்கி எருவாகிறது!

   இந்த நாட்டின் பல்கலைக்கழகங்களில் மரம் பேணல் குறித்தத் தனிப் பட்டப்படிப்பு(Arboriculture) உள்ளது என்பது வியப்பான செய்தியாகும். மேலும்  மரம் ஏறுதல்(Tree climbing) என்பது ஒரு வீர விளையாட்டாக உள்ளது. இதற்கான பயிற்சி மையங்களும் உண்டு. கனடா நாட்டின் மரமேறி(Arborist) ஒருவர் தொடர்ந்து பன்னாட்டு மரமேறும் போட்டியில் முதலாவதாக வருகிறாராம்!

 கட்டடம் கட்டுவதற்கு ஒரு மரம்  இடைஞ்சலாக இருக்கிறது என்றால் உடனே வெட்டிவிட மாட்டார்கள். அப்படியே அதனைப் பெயர்த்து வேறு இடத்தில் நட்டு விடுவார்கள். அதற்கெல்லாம் மரம்பிடுங்கி மகா எந்திரங்கள் உள்ளன.
     
இங்கே பத்துவழிச் சாலைகள் மிகுதி. மரங்களை நட்டு வளர்த்தபின் சாலை சமைத்தார்களோ என்னவோ, அடர் மரங்களுக்கு அப்பால் சோளமா, கரும்பா என்று எதுவும் தெரிவதில்லை. ஊரைத் தாண்டிவிட்டல் பிறகு நெடிது வளர்ந்த மரத் தொகுதிகளுக்கு இடையேதான் பயணிக்க வேண்டியிருக்கும்.

    நான் இங்கே வந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. பள்ளிகள் மூடிக் கிடக்கின்றன.  இது கடும் கோடைக் காலம்; ஆனால் மாதம் மும்மாரி பொழிந்த வண்ணம் உள்ளது. காரணம் என்ன? வளர்ந்து நிற்கும் மரங்கள் வான்மழையைப் பெற்றுத் தருகின்றன.

    நம் நாட்டிலும்  மழை அளவாக ஆண்டு முழுவதும் பொழிய வேண்டுமானால் முனைப்புடன் மரங்களை வளர்க்க வேண்டும். இருக்கின்ற வீணாய்ப்போன சீமைக்கருவேலன் மரங்களே போதும் என நாம் நினைக்கிறோம். நீதி மன்றம் சொன்னாலும் கேட்பதில்லை.

   ஜக்கி வாசுதேவ் ஒரு நல்ல யோசனை சொல்கிறார். அது ஆறுகளை மீட்டெடுப்பதற்கான அருமையான வழி. “ஆற்றின் இரு பக்கமும் ஒரு கிலோமீட்டர் அளவுக்கு, புறம்போக்கு நிலமாக இருந்தால் அரசும், தனியார் நிலமாக இருந்தால் நில உரிமையாளரும் மா, பலா, பனை, தென்னை போன்ற பலன்தரு மரங்களை நடவேண்டும்” எனச் சொல்கிறார். இதற்கு ஆளுங்கட்சிகள் ஆர்வமுடன் முன்வர வேண்டும்; எதிர்க் கட்சிகள் எதிரிக் கட்சிகளாக இல்லாமல் இதை ஆதரிக்க வேண்டும். பொதுமக்கள் முழுமனதுடன் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவை எல்லாம் நடக்குமா? நடந்தால் ஆறுகள் நடக்கும்; இல்லாவிட்டால் கிடந்த இடத்தில் கிடக்கும்.

    சங்ககாலத்தில் மரங்களை உறவு முறைச் சொல்லி நேசித்தோம்; பின்னர் பூசித்தோம். அதன்பிறகு யோசித்தோம் என்ற அளவில் சோம்பிக் கிடக்கலாமா? சோம்பிக் கிடந்தால் நிலம் என்னும் நல்லாள் நம்மைப் பார்த்துக் கைகொட்டி நகைப்பாள் என்று வள்ளுவர் சொல்வது செவிகளில் விழுகிறதா?

  இந்தியாவில் மக்கள் பெருக்கம் என்பது ஒரு முட்டுக்கட்டை அன்று. அது மக்கள் சக்தியின் பெருக்கம் எனக்கொண்டு செயல்படத் தொடங்கினால் நாமும் சாதிக்கலாம்.

   கனடாவில் வாழும் மக்களிடையே மரங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகம். விழாக் காலங்களில் மரக்கன்றுகளைப் பரிசாக அளிப்பதில் பெருமை கொள்கிறார்கள். கனடாவில் வசிக்கும் என் நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு அண்மையில் மணிவிழா நடந்தது. நான் வழக்கம்போல் ஒரு நூலை அவருக்குப் பரிசாகத் தந்தேன். ஆனால் என் மகள் அவருக்கு அளித்தப் பரிசு வித்தியாசமாக இருந்தது. மடிக்கணினியைத் திறந்தாள். கனடாவில் மரம் நடுவோம் என்னும் வலைத்தளத்தில் நுழைந்தாள். தன் கணக்கிலிருந்து சில டாலர்களை அந்த மரம் நடும் அமைப்பிற்கு மாற்றினாள்.  அடுத்த இரு நாள்களில் அவர் பெயரில் மரம் நடப்பட்ட விவரத்துடன் ஒரு வாழ்த்து அட்டை கனடா அஞ்சல் மூலம் அவரை அடைந்தது!

   மற்றுமொரு தொண்டு நிறுவனம் மரம் வளர்ப்பதற்கு என்றே தனியாக உள்ளது. மரம் வளர்க்க ஆசை உள்ளது ஆனால் நடுவதற்கான சொந்த இடம் இல்லையே என வருந்துவோர் இந்த அமைப்புக்கு மாதம் பன்னிரண்டு டாலர் சந்தா செலுத்தினால் போதும்; அவர்கள் பெயரில் ஆண்டுக்கு நூறு கன்றுகளை நட்டு மரங்களாக வளர்த்துக் கொடுப்பார்கள்.

   இன்னொரு வியப்பான நடைமுறை பொதுமக்களிடையே உள்ளது. குடும்பத்தில் யாராவது இயற்கை எய்தினால் அவர் பெயரில் பூங்கா போன்ற பொது இடங்களில் ஒரு மரம் வளர்த்து ஒரு சிறிய கல்வெட்டையும் அமைத்து விடுகிறார்கள்.

  ஆக எவ்வகையானும் மரம் நட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

   இத்தகைய விழிப்புணர்வு நம் நாட்டு மக்களுக்கும் வந்து மரம் நடும் பணியைச் சிரமேற்கொண்டு செய்வார்களா?

செய்தால் உயிர் வாழலாம் இல்லையேல் செத்து மடிய நேரிடும்.
................................................
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.
   

     

10 comments:

  1. மிக மிக அருமையான கட்டுரை!! மெய் சிலிர்த்தது கனடாவைப் பற்றி அறியும் போது!!

    //ஆனால் நம்மிடத்தில் இன்று ஆன்மிகமும் இல்லை; அறிவியலும் இல்லை. பொன்முட்டை இடும் வாத்தை அறுத்துப் பார்க்கும் முட்டாள்தனம்தான் உள்ளது.// உண்மை உண்மை!!!

    அவர்கள் வாழும் கலை அறிந்து வாழ்கிறார்கள்...நாமோ??!!! நம் வாழ்வாதாரத்தைத் தொலைத்து நிற்கிறோம் எதையோ நினைத்துக் கொண்டு. அருமையான கட்டுரை ஐயா!

    துளசி, கீதா

    ReplyDelete
  2. விழிப்புணர்வு அவசியம்நம் நாட்டு மக்களுக்கும் வர வேண்டும் ஐயா

    ReplyDelete
  3. மேப்பிள் மரத்தடியில் உங்களின் போதி மரச் சிந்தனைகள் அருமை.

    ReplyDelete
  4. நாடு கடந்து சென்று நல்லனவற்றை நிறையவே செய்து வருகிறீர்கள். அவற்றில் மர பாதுகாப்பும் ஒன்று. நல்ல பயனுள்ள அறிவுறுத்தல் கட்டுரையே. நம் மக்கள் உணர வேண்டும். எனினும் தங்கள் செயலும் கட்டுரையும் அருமை! -நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள கட்டுரை ஐயா!
    நம் நாட்டில் இனி அனைத்து விழாக்களிலும் மரக்கன்றுகளை பரிசளித்தால் மேலும் விழிப்புணர்வு ஏற்படும்.

    ReplyDelete
  6. என்னை இனிமேல் ஏன் மரம் போல் நிற்கிறாய் என்று கேட்டால் வெட்கப்பட மாட்டேன்
    பெருமை கொள்வேன்

    ReplyDelete
  7. நானும் கனடா சென்ற பொது இந்த விஷயத்தை நோக்கினேன் ஆனால் உங்கள் அளவு ஆழமாகச் சிந்திக்கவில்லை . நன்றி

    ReplyDelete
  8. Tamil Nadu people on way to self destruction with great leaders of the Dravidian movement from 1960s.
    Nature will survive and the dravidians will perish.

    ReplyDelete
  9. ஐயா, இதுவரை நீங்கள் எழுதிய கட்டுரைகளில் இதையே மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். இன்று பல மரங்கள் ரியல் எஸ்டேட் என்ற பெயரால் காணமல் போய்விட்டன. இயற்கையில் அந்தந்த பருவங்களில் கனிகள் மற்றம் காய்கள் உண்ட கடைசி தலைமுறையாவிடுவோமோ என்ற பயம் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது. மரம் வளர்க்க நான் பல முறை மாணவர்கள் உதவியுடன் பல முயற்சிகள் செய்து தோல்வியை அடைந்துள்ளேன். அப்துல் கலாமின் முதலாவது ஆண்டு நினைவு நாளுக்கு 64 வகையான மரக் கன்றுகளை ஈஷா நர்சரியில் வாங்கி அதை மாணவர்களிடம் இந்த மரங்கள் என விளக்கி கல்லூரி வளாகத்தில் நட்டோம். ஆனால் அவை மூன்று மாதத்தில் காணாமல் போயின. இன்று வாஸ்து எனும் பொய்ப் பிரசாரத்தில் பல மரங்கள் வீட்டருகே இருந்து வெட்டப் படுகிறது. இன்று நீர் நிலைகள் காணாமல் போவதற்கு மரங்கள் வெட்டப் படுவதே என்பது பற்றிய வீடியோவை மாணவர்களுக்கு காண்பித்தேன். மேலும் ஈஷா செய்யும் நதிகளை மீட்போம் என்னும் விழுப்புணர்வு பற்றியும் அதற்காக 80009 80009 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவும் வைத்தேன். இது மாணவர்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்று இதுவரை 4000 மிஸ்டுகால் கொடுத்துள்ளனர். இளைஞர்கள் இப்போது இயற்கையை நோக்கி திரும்பியுள்ளனர். எனவே மரங்கள் மீண்டும் வளரும் பாரதம் பசுமை பெறும். நன்றி ஐயா.

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா!
    உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை!
    உங்களைப் போன்ற சமூக அக்கறை உள்ளவர்களால் தான் நம் நாடு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது!
    நன்றி ஐயா.

    ReplyDelete